வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவாமி லீக் கட்சி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தது. அதே சமயத்தில் இடஒதுக்கீடுக்கு ஆதரவாக சில மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் குதித்தனர். இதனால் வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று அவரது இல்லத்தை மாணவர்கள் அமைப்பினர் முற்றுகையிட்டனர். இதனால் அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இந்நிலையில் மாணவர்கள் அமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில் சில சமூக விரோத சக்திகள் ஊடுருவி வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இவர் மீண்டும் வங்கதேசத்தில் அமைதியும், இயல்பு வாழ்க்கை திரும்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவுடன் மீண்டும் வலுவான நட்புறவை ஏற்படுத்தி கொள்ளும் வகையில் அந்நாட்டு வெளியுறவுத்துறை இந்தியாவுடன் ஆலோசனை நடத்தியது. ஆனால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையால் வங்கதேசத்தில் மேலும் குழப்பம் அதிகரித்துள்ளது.
மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டது கவலை அளி்ப்பதாக கூறியுள்ள ஹசீனா, லட்சக்கணக்கான தியாகிகளின் ரத்தத்தை போராட்டக்காரர்கள் அவமதித்தனர். நாட்டு மக்களிடம் இருந்து எனக்கு நீதி வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதி தேசிய துக்க தினமாக உரிய கண்ணியத்துடனும், மரியாதையுடனும் கடை
பிடிக்க வேண்டும். வங்கதேசத்தில் நடந்து வரும் கொலைகள் மற்றும் நாச வேலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனா வீட்டை மாணவர்கள் சூறையாடிய போது அங்கிருந்து விலையுயர்ந்த பொருட்களை எடுத்து சென்றனர். மேலும், வாத்து, முயல் ஆகிய விலங்குகளை எடுத்து சென்றனர். நகை, பணம் ஆகியவற்றையும் சுருட்டி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் திருடிச்சென்ற பொருட்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று மாணவர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது. அதன்படி, ெபாருட்களை திரும்ப பெறுவதற்கு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன.
இதையடுத்து அரசு இல்லத்தில் இருந்து மாணவர்கள் எடுத்து சென்ற சேர், ஷோபா, மேஜை, நாற்காலி, பிரிட்ஜ், ஆப்பிள் போன்கள், புறாக்கள், பூனை ஆகியவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வந்து திருப்பி கொடுக்கிறார்கள். அதேபோல விலையுயர்ந்த நகைகள், வைர மூக்குத்தி, ரூ.75 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் திரும்ப ஒப்படைத்துள்ளார்கள். ஒருவர் வாத்தை எடுத்து சென்றுள்ளார். அதை சமைத்து சாப்பிட்டு விட்டதால் அதற்குரிய பணத்தை கொடுத்து சென்றுள்ளார்.
இது குறித்து மாணவர்கள் போராட்டக்குழு ஒருங்கிணப்பாளர் ஷாகிப் ஆரிப் பெருமையுடன் கூறுகையில், மாணவர்கள் யாரும் திருடர்கள் அல்ல. ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற உணர்ச்சி பெருக்கில் கிடைத்த பொருட்களை எடுத்து சென்றிருக்கலாம். அவை அனைத்தும் நாட்டு சொத்து. அவற்றை மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வருவோம்’ என்றார். இதை வரவேற்றுள்ள அந்நாட்டு மக்கள் மாண்மிகு மாணவர்களை பாராட்டி வருகின்றனர்.