எளிய குடும்பத்தில் பிறந்து தன் உழைப்பால் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர் அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களின் நாயகனாக இன்றும் கோடிக்கணக்கான இளைஞர்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடக்கும் பல இளைஞர்கள் குழுவினை தமிழகத்தில் பார்க்கலாம். பல சிற்றூர்களில் அப்துல் கலாம் பெயரில் நற்பணி மன்றங்கள், சுற்றுச்சூழல் இயக்கங்கள் இயங்கி வருகின்றன. இப்போது உள்ள மாணவர் சமுதாயத்திற்கு அப்துல் கலாம் கூறிய அறிவுரைகளை நாம் அவசியம் கொண்டு சேர்க்க வேண்டி உள்ளது.ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் முதல் வெற்றி என்பது அவர்களின் உழைப்புக்குச் சான்றாகும். ஆனால் சமுதாயமோ அந்த உழைப்பை மதிக்காமல் அவருக்கு நல்ல நேரம் இருக்கிறது. அதனால் இந்த வெற்றி கிடைத்தது என்று புறம் கூறும். எனவே இளைஞர்களைப் பார்த்து அப்துல் கலாம் சொல்கிறார் ”முதல் வெற்றிக்குப்பின் ஓய்வெடுக்காதே, ஏனென்றால் இரண்டாவது முயற்சியில் நீ தோற்றால் முதல் வெற்றி உன் உழைப்பால் அல்ல அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று சொல்லிவிடும் உலகம்”. இதை கேட்ட இளைஞர் நிச்சயம் ஓய்வெடுக்க மாட்டார் அதுவும் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும் என்கிற விதையை அவர் மனதில் விதைத்திருக்கிறார் அப்துல் கலாம்.
அதேபோல் இன்று மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் பரவி வரும் சூழலில் அது குறித்து அப்துல் கலாமின் சிந்தனையை மாணவர் சமுதாயம் நினைத்துப் பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் மனதில் ஏற்று பின்பற்ற வேண்டும். ”உயரிய சிந்தனை உள்ளவர்களுக்கு மதம் என்பது நண்பர்களை ஏற்படுத்திக் கொடுக்கும் கருவி. குறுகிய மனப்பான்மை உள்ளவர்களுக்கு மதம் என்பது சண்டையிடுவதற்கு மட்டுமே பயன்படும் கருவியாகும்” என்னும் அவரது சிந்தனை அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை நமக்கு உணர்த்துகிறது.ஒருவர் கடினமாக உழைத்து அதன் மூலம் கிடைக்கும் வெற்றி என்பது வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒன்றாக அமையும் அவரை மேலும் மேலும் உழைக்க தூண்டுவதாகவும் அந்த வெற்றி அமைந்திருக்கும். இந்த வெற்றிக்காக நாம் பட்ட பாடுகள் அனைத்தும் இறுதியில் நமக்குச் சுவையானதாக மாறிவிடும் இதைப்பற்றி அப்துல் கலாம் குறிப்பிடும்போது ”வாழ்க்கையில் மனிதனுக்கு நிச்சயம் கஷ்டங்களும், பிரச்னைகளும் வேண்டும். இல்லையெனில் அடையும் வெற்றியில் சுவை இருக்காது” என்கிறார்.மிகவும் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். அப்படி உழைக்காதவர்களுக்குத் தோல்வி நிச்சயம். அதற்காக தோற்று விட்டோமே என்று சோம்பிக் கிடந்தால் மீண்டும் தோல்வி மேல் தோல்வியே நமக்கு கிடைக்கும்.
அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு அவர் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளாக ”தோல்வி என்னை ஒருபோதும் தடுக்க இயலாது… எனது வெற்றிக்கான இலக்கு வலிமையாக இருக்கும்போது” என்று கூறியுள்ளார். இதனை மனத்தில் பதித்துக் கொண்டால் நம் வெற்றிக்கான இலக்கை வலிமையாக்கிக் கொள்ளலாம். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றார் கணியன் பூங்குன்றனார். அதையே கொஞ்சம் மாற்றிச் சொல்லி இருக்கிறார் நம் ராமேஸ்வரத்து விஞ்ஞானி ”சுறுசுறுப்பாய் இருங்கள். நீங்கள் நம்பும் விஷயத்திற்காகத் தொடர்ந்து போராடுங்கள். நீங்கள் இதனைச் செய்யவில்லையெனில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம்”. நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நாமே தீர்வு காண வேண்டும் .நமக்காக நாம் தான் போராட வேண்டும் என்பதைத்தான் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
துப்பாக்கி சுடும் வீரருக்கு இலக்கு மட்டுமே கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதுபோலவே ஒரு குறிக்கோளுக்காக உழைப்பவருக்கு குறிக்கோள் மட்டுமே கண்ணுக்குத் தெரிய வேண்டும் அதை நோக்கிச் செல்லும் பாதையில் ஏற்படும் தடைகளை ஒரு பொருட்டாக மதிக்கக் கூடாது என்பதைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார்.”உனது குறிக்கோளில் வெற்றிபெற உனது எண்ணங்கள் உனது லட்சியத்தை நோக்கியே ஒருமுகப்படுத்த வேண்டும்”.
மனிதர்களுக்கு அவர்களின் வலிமை என்பது உடலில் அல்ல உழைப்பில் தான் இருக்கிறது. எந்த அளவிற்கு உழைக்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு ஊதியம் மட்டுமல்ல வெற்றியும் கிடைக்கும். மனிதர்களுக்கு உடல் வலிமையை விட வலிமையான ஒன்று தன்னம்பிக்கைதான். இந்த தன்னம்பிக்கையை ஒருபோதும் இழந்து விடக்கூடாது என்பதை நாம் அப்துல் கலாம் அவர்கள் பறவையை ஒப்பிட்டு குறிப்பிடுகிறார். ”பறவையின் வலிமை என்பது அதன் சிறகுகளில் அல்ல அதன் நம்பிக்கையில் உள்ளது”. நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் சமூகத்தில் இரண்டு விதமான போக்குகள் காணப்படுகின்றன. அறிவியலை ஆக்கத்திற்கும் பயன்படுத்தலாம் அழிவிற்கும் பயன்படுத்தலாம் .ஆனால் நம் கலாம் அவர்கள் அறிவியல் என்பது ஆக்கத்திற்கே என்பதிலிருந்து எப்போதும் விலகியது கிடையாது. அதை இளைஞர்களுக்கு அறிவுரையாக கூறும்போது, ”அறிவியல் வளர்ச்சி என்பது மனித இனத்திற்குக் கிடைத்திருக்கும் அற்புத பரிசாகும். அதனை நாம் சிதைக்கக்கூடாது” என்கிறார். வாழ்க்கையில் முன்னேறியவர்களைப் பார்த்து பொறாமைப்படும் ஒரு மோசமான குணம் ஒரு சில இளைஞர்களிடையே பரவி இருக்கிறது.
அந்த முன்னேற்றத்திற்கு அவர்கள் எவ்வாறு உழைத்தார்களோ அது போல் நாமும் உழைத்து அவர்களை விட முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் இளைஞர்களுக்கு வந்தால் எதிர்காலச் சமுதாயம் நாம் எதிர்பார்க்கும் முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை அப்துல் கலாம் இப்படி கூறுகிறார். ”நீ சூரியனைப் போல ஒளிர விரும்பினால், முதலில் சூரியனைப் போல எரிய கற்றுக்கொள்” எல்லாவற்றுக்கும் மேலாக அப்துல்கலாம் கூறிய அறிவுரைகளில் தலைசிறந்த அறிவுரை‘கனவு காணுங்கள்” என்பதே ஆகும். அதற்கு ஒரு விளக்கமும் கொடுக்கிறார். உறங்கும்போது வருவதல்ல கனவு உன்னை உறங்கவிடாமல் செய்வதே அந்த கனவு என விளக்கமும் கொடுத்துள்ளார்.அவரது பிறந்தநாளான வருகின்ற அக்டோபர் 15ம் தேதி முதல் அவர் கூறிய அறிவுரைகளை பின்பற்றி நடப்போம் நாமும் உயர்வோம் நம் நாட்டையும் உயர்த்துவோம் என்பதை இளைஞர்கள் உறுதிமொழியாக ஏற்றுக் கொண்டால் வாழ்வு சிறக்கும், தேசமும் சிறப்படையும் என்பது மறுப்பதற்கில்லை.
– இரத்தின புகழேந்தி
நீங்களும் வரைந்து பழகுங்கள்
ஓவியங்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல… உள்ளுணர்வுகளின் வெளிப்பாடு ஆகும். ஆயகலைகள் 64ல் ஒன்றான ஓவியக்கலை உங்கள் மனதின் வெளிப்பாட்டை, கலைநயத்தை ஓவியங்கள் வாயிலாக இந்த உலகத்திற்கு படம்பிடித்துக் காட்டும். கலர் பென்சில் ஓவியங்கள், க்ரயான்ஸ் ஓவியங்கள், கரிக்கட்டை ஓவியங்கள், நவீன ஓவியங்கள்/டிஜிட்டல் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள், நீர்வண்ண ஓவியங்கள் (Water Color Paiting), எண்ணெய் ஓவியங்கள்(Oil Painting) கோட்டு ஓவியம் என ஓவியக்கலை பல வகைப்படும். உங்களுக்குள் பொதிந்திருக்கும் ஓவியத் திறமையை வெளிக் கொண்டுவரும் முயற்சியாகவே இங்கு பயிற்சி செய்யும் விதமாக எளிமையான மாதிரி படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்களும் வரைந்து பாருங்கள். ஒரு வேளை உங்களுக்குள்ளும் ஓவியம் வரையும் தனித்திறன் மறைந்திருக்கலாம்.