கரக்பூர்: கரக்பூர் ஐஐடி விடுதியில் கிரண் சந்தரா என்பவர் இளநிலை மின் பொறியியல் துறையில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு இவரது அறைக்கதவு வெகு நேரமாக பூட்டியிருந்தது. சக மாணவர்கள், கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். கிரண் சந்தரா, மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விடுதி காவலர்களின் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டாக்டர்கள் பரிசோதனையில், இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அறிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை கேள்விபட்டதும் கிரண் சந்தரரின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறினர். இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய சந்தராவின் தந்தை, ஐஐடி மாணவர்களிடையே ஏன் இவ்வளவு மன அழுத்தம் உள்ளது. 4ம் ஆண்டு ஆய்வறிக்கை காரணமாக சந்தரா மன அழுத்தத்தில் இருந்தார்’ என்றார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.