நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள ஒன்றிய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர சோனி (50) ஓவியம் மற்றும் கலைப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். இதையடுத்து மாணவி ஒருவர் புகாரின்படி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து ராமச்சந்திர சோனியை கைது செய்தனர். இவர் மீது 15 மாணவிகள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராமச்சந்திர சோனி கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அவர் செல்போனில் மாணவிகளை தவறான கோணத்தில் படம்பிடித்து வைத்திருக்கிறாரா என்பதை அறிய அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.