சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா கடந்த 2015ம் ஆண்டில் அங்கு படித்த மாணவி தன் பிறந்த நாளன்று ஆசிர்வாதம் வாங்க சென்றபோதும், ஆஞ்சநேயர் கோயிலுக்கு மாணவியை வரவழைத்தும் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது 2021ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை முடிந்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவற்றது. அரசியல்வாதிகள் மற்றும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்கள், ஊடக விவாதம் ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக முறையான விசாரணை இன்றி மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து முன்னாள் மாணவி அளித்த புகாரில், சிவசங்கர் பாபா மீது எதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது என்று சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.