ராசிபுரம்: புதுச்சத்திரம் அருகே, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓவிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே காரைக்குறிச்சி புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருப்பவர் ராமமூர்த்தி. இவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தெரிந்து ஆவேசமடைந்த பெற்றோர் நேற்று பள்ளிக்கு வந்தனர். இதனையறிந்த மற்ற ஆசிரியர்கள் ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை பள்ளியின் வகுப்பறையில் வைத்து பூட்டிவிட்டு புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த போலீசாரிடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டும், ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை பூட்டி வைத்திருந்த அறையின் கதவை திறக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் அதிகாரிகளும், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் ஆகியோரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர் ராமமூர்த்தியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து பெற்றோர்களை சமாதானம் செய்து அறையில் இருந்த ஆசிரியர் ராமமூர்த்தியை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.