திருவெறும்பூர்: திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில்(என்ஐடி) தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு கடந்த 29ம் தேதி ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியரான ராமநாதபுரம் முதுகுளத்தூரை சேர்ந்த கதிரேசன்(38) கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை கண்டித்து மாணவ, மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். திருச்சி எஸ்பி வருண்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, விடுதியில் உள்ள 3 வார்டன்களும் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க என்ஐடி நிர்வாகம் உயர் மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. கல்லூரி முதல்வர் கார்வேம்பு தலைமையிலான 9 பேர் குழுவினர் நேற்று முதல் விசாரணையை தொடங்கினர்.
கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா மற்றும் மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து விடுதி நிர்வாக குழு உறுப்பினர்கள், பணியில் இருந்த பெண் காவலர்கள், விடுதி வார்டன்கள், பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து குழுவினர் கூறுகையில், அதிகாரிகளுக்கும், பணியில் இருந்த காவலர்களுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாதது, வார்டன்கள் தங்கள் பொறுப்பை பெரிதாக எடுத்து கொள்ளாதது, பாதிக்கப்பட்டவருடன் வார்டன்கள் நடந்து கொண்ட விதம் பற்றி விசாரிக்கப்பட்டது. விசாரணை முழுமையாக முடிந்த பிறகே நடவடிக்கை என்ன என்பது தெரியவரும் என்றனர். மேலும் பாதுகாப்பு நெறிமுறைகள் அடங்கிய செயல் திட்டம் ஒன்று குழு சார்பில் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.