நெல்லை: கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய பேராசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பாளை. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஒரு கல்லூரி மாணவியின் பெற்றோர் கண்ணீர் மல்க பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், தங்களது மகளுக்கு அவர் படிக்கும் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக செல்போனில் குறுஞ்செய்தி அனுப்புவதாகவும், ஆபாசமாக பேசியதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து மகளிர் போலீசார் பாளையில் மாணவி படித்து வரும் சம்பந்தப்பட்ட கல்லூரியில் விசாரணை மேற்கொண்டனர். அதில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, வணிகவியல் துறையில் உதவி பேராசிரியராக தற்காலிக பணியில் இருக்கும் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட குருபாதம் மகன் பிரைட் ஜோவர்ட்ஸ்(34) என்பதும், தற்போது நெல்லை மாவட்டம் மருதகுளம், மேற்கு புதுக்கோட்டை கட்டிடம் தெருவில் ஒரு வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு வந்து செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பிரைட் ஜோவர்ட்சை மகளிர் போலீசார் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர், மாணவிக்கு செல்போனிலும், நேரிலும் பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசி டார்ச்சர் செய்து வந்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து உதவி பேராசிரியர் பிரைட் ஜோவர்ட்சை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நள்ளிரவில் பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவியும், சக மாணவனும் பழகி வந்ததும், அதைத் தெரிந்து கொண்ட உதவி பேராசிரியர் பிரைட் ஜோவர்ட்ஸ் மாணவியிடம் வரம்பு மீறி பேசினாலும் அவர் வெளியே சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் ஆபாசமாக பேசியதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது உறுதியானால் ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று கல்வித்துறை எச்சரித்து இருந்தது. இந்நிலையில், கைதான பேராசிரியர் பிரைட் ஜோவர்ட்ஸ் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.