ராமநாதபுரம்: பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், ஆஜராகாத அதிமுக கவுன்சிலருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பரமக்குடி நகராட்சி அதிமுக கவுன்சிலர் சிகாமணி (44), மறத்தமிழர் சேனை அமைப்பைச் சேர்ந்த புதுமலர் பிரபாகரன் (42), ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜ முகம்மது (36) மற்றும் உமா, கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் அதிமுக கவுன்சிலர் சிகாமணி, நிபந்தனை ஜாமீன் பெற்று திருவில்லிப்புத்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் கையெழுத்திட்டு வந்தார். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவி பிறழ் சாட்சியாக மாறினார். இது விசாரணையை பாதிக்கும் எனக்கூறி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிசிஐடி போலீசார், சிகாமணியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனு செய்தனர்.
இதனையடுத்து ராமநாதபுரம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கு விசாரணையை ராமநாதபுரம் நீதிமன்றத்திலிருந்து திருவில்லிப்புத்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில், சிகாமணியை தவிர மற்றவர்கள் ஆஜராகினர். ஜாமீன் ரத்தான நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத சிகாமணிக்கு பிடிவாரன்ட் ஆணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த விசாரணை விசாரணையை ஆக.23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.