அம்பத்தூர்: சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 48வது தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது 11 வயது மகன் தருண் கார்த்திக், அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம் போல நேற்று மதியம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த தருண் கார்த்திக் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணிக்கம் மற்றும் அவரது மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகனின் கழுத்தில் ஊஞ்சல் கயிறு இறுக்கிய நிலையில் வீட்டில் சடலமாக கிடந்துள்ளான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவன் ஊஞ்சல் ஆடும்போது தவறி விழுந்து கழுத்து இறுக்கி உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் வில்லிவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீட்டிற்கு உள்ளே யாராவது வந்தார்களா என சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.