ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை பகுதியில் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் செங்காட்டானூர், அம்மையார்குப்பத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மங்கலிங்கிழார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் பிளஸ் 1 மாணவர்களுக்கு 272 விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது. அம்மையார்குப்பம் மங்கலிங்கிழார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை பாரதி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ பங்கேற்று 130 மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி, செந்தில்குமார், ஒன்றிய திமுக செயலாளர் சண்முகம், ஒன்றியக்குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மோகன், மோனிஷா சரவணன், திமுக நிர்வாகிகள் அன்பு, இளங்கோவன், அசோகன், பலராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.