சசாரம்: பீகாரில் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10ம் வகுப்பு மாணவர் சுட்டு கொல்லப்பட்டார். இன்னொரு மாணவர் படுகாயமடைந்தார். பீகார் மாநிலம், ரோத்தாஸ் மாவட்டம் சசாரமில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு நடந்தது. தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் தேர்வு முடிந்த பின்னர் மாணவர்கள் ஒரு ஆட்டோவில் வந்துள்ளனர். அப்போது பள்ளியில் படிக்கும் சக மாணவர் ஆட்டோவில் வந்திறங்கிய மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அமீத் குமார் மற்றும் சஞ்சீத் குமார் படுகாயமடைந்தனர். விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் அமீத் உயிரிழந்தார். சஞ்சீத் குமார் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கியால் மாணவன் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் மாணவனின் உடலை போட்டு அவரது பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் உயரதிகாரிகள் அங்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுட்ட மைனர் சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.