கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலை கல்லூரி முதுநிலை தமிழ்த்துறை பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ. இவர், முதுநிலை தமிழ்த்துறை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தியபோது, ஜாதி ரீதியாகவும், மாணவிகளை தரக்குறைவாகவும் பேசியதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாணவர்கள் கடந்த 15ம் தேதி முதல் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக முதல்வர் மாதவி அறிவித்தார். இந்நிலையில், தமிழ்த்துறை உதவி பேராசிரியை ஜெயவாணி ஸ்ரீ, ஈரோடு மாவட்டம், தாளவாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பேராசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து கல்லூரி வழக்கம் போல் செயல்படும் என முதல்வர் மாதவி அறிவித்தார். அதன்படி நேற்று கல்லூரி வழக்கம் போல் இயங்கியது.