Thursday, February 22, 2024
Home » மாணவர்கள், பெண்களுக்கு சேவை செய்யவே வேலையை ராஜினாமா செய்தேன்!

மாணவர்கள், பெண்களுக்கு சேவை செய்யவே வேலையை ராஜினாமா செய்தேன்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

‘‘நான் இந்த துறைக்கு வந்து இரண்டு வருஷமாச்சு. அதற்கு முன் வரை 20 வருஷம் கல்வித்துறையில் நான் வேலை பார்த்து வந்தேன். ஆரம்பத்தில் கொச்சியில் வேலை பார்த்த நான் அதன் பிறகு பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியரா வேலைக்கு சேர்ந்தேன். எனக்கு அடித்தட்டு மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்தது. அதனால் எனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவர்களுக்காக என்னால் முடிந்த சேவையினை செய்து வந்தேன்.

தற்போது அதில் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன்’’ என்றார் சுமித்ரா பினு. பேராசிரியராக இருந்தவர், சமூக சேவையில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வாக்கரூ நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் துறையில் தலைவராக இணைந்து தன்னுடைய சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

‘‘2019ல் பேராசிரியர் வேலையில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு நான் கோவையில் செட்டிலாயிட்டேன். இங்கு வாக்கரூ நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் துறையில் வேலைக்கு சேர்ந்தேன். பொதுவாக பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் இது போன்ற சி.எஸ்.ஆர் வேலையில் ஈடுபடுவாங்க. அதன் மூலம் மக்களுக்கு தங்களால் முடிந்த சேவையினை செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக இருக்கும். எனக்கு சேவை மனப்பான்மை இருப்பதால், என்னால் அதில் திறமையாக செயல்பட முடியும் என்ற காரணத்தால்தான் நான் என் பேராசிரியர் வேலையை ராஜினாமா செய்தேன். இங்கு வேலைக்கு சேர்ந்ததும் எங்க நிறுவனம் சார்பாக நான் பார்த்த முதல் பிராஜக்ட் கண் மருத்துவ முகாம்.

அது சக்சஸ் பெற அடுத்த கட்டமாக அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து சர்வே எடுத்தோம். அதில் பல பள்ளிகளில் கட்டிடங்கள் சரியாக இல்லை, கழிவறை வசதிகள் இல்லை என்று தெரிய வந்தது. வகுப்பறை வசதி இல்லாமல் மைதானம் வகுப்பறையாக மாற்றப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் முதலில் ஏழு பள்ளிகளை தேர்வு செய்தோம். அவர்களின் தேவையை அறிந்து கொண்டு அதனை ஒவ்வொன்றாக செயல்படுத்த ஆரம்பித்தோம். அதில் முதலாவதாக வகுப்பறையினை கட்டிக் கொடுத்தோம்’’ என்றவர் இதனைத் தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்துள்ளார்.

‘‘குழந்தைகளுக்கு கல்வி, ஆரோக்கியம் அவசியம், அடுத்து பெண்களின் முன்னேற்றம் மற்றும் விளையாட்டு துறையில்தான் நாங்க அதிகமாக கவனம் செலுத்தி வருகிறோம். இதைத்தவிர தனித்திறமை, சுகாதாரம் மற்றும் வாழ்வியல் குறித்த தேவைக்கான தீர்வினையும் ஏற்படுத்தி தருகிறோம். இந்த திட்டத்தின் பெயர் ‘உயர்வு’. பெண்களின் மேம்பாடு குறித்து செயல்படுவதற்காக துவங்கினோம். அதிலும் குறிப்பாக மனநலம் குன்றிய பெண்கள். இந்த திட்டத்தில் அவர்களையும் இணைக்க காரணம், கிணத்துக்கடவில் இவர்களுக்கான சரணாலயம் ஒன்றினை ஒரு தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அதில் மனதளவில் பாதிக்கப்பட்ட மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 76 ஆதரவற்ற பெண்கள் உள்ளனர். மேலும் இங்கு குழந்தைகளுக்கான காப்பகமும் உள்ளது. அங்குள்ள குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்கான செலவினை கடந்த ஐந்து வருடமாக எங்க நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஒரு முறை நாங்க அந்த சரணாலயத்திற்கு சென்ற போது, அங்கு மனநிலை குன்றிய பெண்கள் தூங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்தோம். காரணம், அவர்களின் மனதினை கட்டுப்படுத்த மருந்துகள் சாப்பிட வேண்டும். அவை தூக்கத்தை ஏற்படுத்தும். மருந்து, மாத்திரைகள் அவர்களின் பிரச்னைக்கு எந்நேரமும் தீர்வாக அமையாது. அதனால் அவர்களுக்கு சின்னச் சின்ன வேலைகளை செய்ய கற்றுக் கொடுக்க திட்டமிட்டோம். முதலில் சாதாரண பேப்பரை மடித்து அதில் பைகளை எவ்வாறு தயாரிக்கலாம் என்று சொல்லிக் கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து துணிப்பைகளை தைத்துக் கொடுக்கச் செல்லி கொடுக்க திட்டமிட்டோம்.

காரணம், எங்களுடையது செருப்பு விற்பனை நிறுவனம் என்பதால், எங்க கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் செருப்பு அல்லது ஷூக்களை வாங்கிச் செல்லும் போது அதை இவர்கள் தயாரிக்கும் துணிப்பையில் போட்டு கொடுக்கலாம் என்பதுதான் எங்களின் யோசனை. அதற்கு முன் அவர்களால் அதனை செய்ய முடியுமான்னு யோசித்ேதாம். முதலில் ஆதரவற்ற பெண்களுக்குதான் பயிற்சி அளித்தோம். அவர்கள் அதை கற்றுக் கொண்டு அங்குள்ள மனநலம் குன்றிய பெண்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள்’’ என்றவர் பை தைக்க தேவையான இயந்திரங்கள் எல்லாம் அமைத்துக் கொடுத்துள்ளார்.

‘‘முதலில் கார்ட்போர்டில்தான் பையின் அளவிற்கு ஏற்ப கத்தரிக்க சொல்லிக் கொடுத்தோம். அதன் பிறகு அதனை எவ்வாறு தைக்க வேண்டும் என்று பயிற்சி அளித்தோம். மூன்று மாதப் பயிற்சியில் அனைவரும் பை தைக்க தயாரானாங்க. அவர்கள் தைக்கும் பைகளை பெரும்பாலும் நாங்க வாங்கிக் கொள்வோம். சாதாரண பெண்கள் பொறுத்தவரை அவர்களே கத்தரித்து பையினை தைத்து விடுவார்கள்.

ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவர் அனைத்தையும் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதே சமயம் அவர்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும். அதனால் பையின் வடிவத்தை பென்சிலில் வரைந்து கொடுப்போம், அவர்கள் அதை வெட்டிக் கொடுப்பார்கள். இது போன்ற சின்னச் சின்ன ேவலைகளில் அவர்களை ஈடுபடுத்த ஆரம்பித்தோம்’’ என்றவர் இதன் மூலம் அவர்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் நல்ல மாற்றத்தை காண முடிந்ததாக கூறினார்.

‘‘பொதுவாக இது போன்ற பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் உறவினர்கள் யாரும் பார்க்க வருவதில்லை. அவர்களால் மீண்டும் தங்களின் உறவுகளோட இணையவும் முடிவதில்லை. அவர்களை நாம் ஒதுக்கிதான் வைத்திருக்கிறோம். இவர்கள் சின்னச் சின்ன தொழிலில் ஈடுபடும் போது, அவர்களின் சிந்தனை மற்றும் மனநிலையில் மாறுதல் ஏற்படும். தங்களின் வேலையினை சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். மற்றவர்களிடம் பேச ஆரம்பிப்பாங்க, யோசிக்கவும் செய்வாங்க.

எதிர்கால இந்தியா என்று குறிப்பிடுவது மாணவர்களைத்தான். அவர்கள் கல்வி கற்க தேவையான அடிப்படை வசதிகளை நாம் கொடுக்க வேண்டும். அதனால்தான் அரசுப் பள்ளிகளை சீரமைக்கும் பணியில் நாங்க ஈடுபட ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு அவர்களின் லைஃப் ஸ்கில்ஸ் குறித்தும் பயிற்சி அளிக்கிறோம். இதில் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், டீம் பில்டிங் அதாவது குழுவாக இணைந்து செயல்படும் திறன், போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு மற்றும் யோகா பயிற்சியும் அளித்து வருகிறோம். தற்போது இதில் ஆறு பள்ளிகள் இணைந்துள்ளனர். இதனைத் ெதாடர்ந்து மேலும் மற்ற பள்ளிகளிலும் இந்தப் பயிற்சியினை அளிக்க திட்டமிட்டு வருகிறோம்’’ என்றார் சுமித்ரா.

தொகுப்பு: ஷன்மதி

You may also like

Leave a Comment

5 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi