குடியாத்தம்: குடியாத்தம் அரசு மகளிர் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவியின் கையை பிடித்து இழுத்ததாக வந்த புகாரின்பேரில் அறிவியல் ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் சில தினங்களுக்கு முன், பெற்றோரிடம் பேசுவதற்காக அறிவியல் ஆசிரியர் ராமன்(45) என்பவரிடம் செல்போனை கேட்டுள்ளார். ஆசிரியரும் செல்போனை கொடுத்துள்ளார்.
பின்னர், அந்த மாணவி பெற்றோரிடம் பேசிவிட்டு செல்போனை கொடுத்தபோது, ஆசிரியர் ராமன் மாணவியின் கையை பிடித்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்த புகாரின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் ேபாலீசார் நேற்று பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அதேபோல் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் முதற்கட்ட நடவடிக்கையாக ஆசிரியர் ராமனை தற்காலிகமாக பொன்னை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்ய கல்வித்துறை அதிகாரிகள் இன்று உத்தரவிட்டனர்.