
புதுடெல்லி: பாடங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என அனைத்து பல்கலைகழகங்களுக்கும் யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பல்கலைகழக மானிய குழு(யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் அனைத்து பல்கலைகழகங்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில், பாடபுத்தகங்கள் தயாரிப்பது, கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை அவரவர் தாய்மொழி மற்றும் வட்டார மொழிகளில் மேற்கொள்வதில் உயர் கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாட புத்தகங்கள் அவரவர் தாய்மொழியிலேயே இருக்க வேண்டும். அதே போல் வேறு மொழிகளில் உள்ள சிறந்த புத்தகங்களை மொழி பெயர்ப்பு செய்திட வேண்டும். ஒவ்வொரு பல்கலைகழகங்களிலும் பாட திட்டங்கள் ஆங்கில வழியில் இருந்தாலும் மாணவர்கள் தேர்வு எழுதும் போது அவரவர் தாய்மொழிகளில் தேர்வு எழுத அனுமதி அளிக்க வேண்டும். அதே போல் பாடபுத்தகங்களை தாய் மொழியில் எழுதப்படுவதை அல்லது மொழி பெயர்க்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.