Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரியபாளையத்தில் சோகம் பிரைடு ரைஸ் சாப்பிட்ட மாணவன் பரிதாப சாவு

பெரியபாளையம்: பெரியபாளையத்தில் நேற்றிரவு சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட 9ம் வகுப்பு பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தார். உணவு ஒவ்வாமை காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் பரத் (14). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்றிரவு, அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் சிக்கன் பிரைடு ரைஸ் வாங்கி வந்து, வீட்டில் குடும்பத்துடன் பரத் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் தயாரித்த தோசையையும் சாப்பிட்டுள்ளார். நள்ளிரவில் திடீரென பரத்துக்கு 4 முறை வாந்தி எடுத்தது. சிறிது நேரத்தில் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் ஏற்கனவே பரத் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து பெரியபாளையம் போலீசார் விரைந்து வந்து பரத்தின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உணவு ஒவ்வாமை காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர். எனினும், சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகுதான் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தகவல் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவியது.