நெல்லை: தென்காசி மாவட்டம், சுரண்டை அடுத்த சேர்ந்தமரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவனை தலையில் விளையாட்டுக்கு தட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து அந்த மாணவன், தலையில் தட்டிய மாணவனை திட்டினார். இருவரையும் சக மாணவர்கள் சமாதானம் செய்தனர்.
பின்னர் மறுநாள் பள்ளிக்கு வந்த மாணவன் புத்தக பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, தலையில் தட்டிய மாணவனிடம் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன், வகுப்பு ஆசிரியரிடம் புகார் கூறினார். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரசு பள்ளிக்கு வந்த போலீசார், அரிவாள் கொண்டுவந்த மாணவனிடம் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.