பிடிவாதம் என்கிற குணத்திற்கும் (obstinacy) சுயநலத்திற்கும் மிகுந்த தொடர்பு உண்டு. பெரும் பாலும் பிடிவாதக்காரர்கள் சுயநலக்காரர்களாகவே இருப்பார்கள். சுயநலம் அதிகரிக்க அதிகரிக்க பிடிவாதமும் அதிகரிக்கும். விளைவுகளைப் பற்றி கவலைப்படாத பிடிவாதத்தை மன உறுதி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. கைகேயி மன உறுதி படைத்தவளா பிடிவாதம் படைத்தவளா என்று சொன்னால் பிடிவாதம் பிடித்தவள் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் அவளுடைய பிடிவாதம் சுயநலத்தைச் சார்ந்தது. விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதது. அந்தப் பிடிவாதத்தின் உச்சியில் தான் தன்னுடைய கணவன் தன்னுடைய காலில் விழுந்து கெஞ்சியும் மசியவில்லை; மயங்கவில்லை; தயங் கவில்லை அது மட்டும் இல்லாமல் எந்த இடத்தில் தட்டினால் வலிக்குமோ அந்த இடத்தில் தட்டுகின்றாள். ஆம். சத்தியம் காத்த அவனுடைய குலத்தை இழுத்துப் பழிக்கின்றாள். இதேதான் வாலி வதைப் படலத்தில் வாலி செய்கின்றான். ஆனால் இராமன் அப்பொழுது அதை ஏற்றுக்கொண்டு அமைதி காக்கின்றான். எதற்கும் உணர்ச்சி வசப்படும் தசரதனால் அப்படி அமைதி காக்க முடியவில்லை. இப்பொழுது பாருங்கள், கைகேயி தசரதனுக்கு நீதி சொல்லுகிறாள்.
‘‘உன்னுடைய குலம் அறம் சார்ந்த குலம் எக்காலத்திலும் கொடுத்த வாக்கை மீறாத குலம் என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கின்றேன். ம்…இப்போது உள்ள நிலைமையைப்பார்த்தால் அதெல்லாம் பொய்போல் இருக்கிறது. உன் குலத்தில் பிறந்த சிபிச் சக்கரவர்த்தி ஒரு புறாவுக்காக தன்னுடைய உடலை அரிந்து கொடுத்தான் என்கிறார்கள். ஆனால் நீ வரத்தைக் கொடுத்து விட்டு இப்பொழுது வருத்தப்படுகிறாய்.’’இந்த வார்த்தையைக் கேட்டதும் துடித்துப் போய்விட்டான் தசரதன்.அப்போதுதான் அவன் கைகேயின் பிடிவாதத்தின் அதிகபட்ச எல்லையைத் தெரிந்து கொண்டான். இனி இவள் வரம் கொடுக்காமல் இருந்தால் நிச்சயம் இறந்து விடுவாள். அதனால் வருகிற பழியைத் தீர்த்துக்கொள்ளவே முடியாது என நிச்சயிக்கிறான். எனவே, ‘‘வரம் தந்தேன், வரம் தந்தேன், நீ உன் மகனோடு நாடாள்வாய். இராமன் காடு ஆள்வான். நான் இறந்து விண் ஆள்வேன்” என்று ஆக்ரோஷமாகக் கூறுகிறான்.வீய்ந்தாளே இவ் வெய்யவள் என்னா மிடல் வேந்தன் ஈந்தேன் ஈந்தேன் இவ் வரம், என் சேய்வனம் ஆள, மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வன், வசை வெள்ளம் நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது, என்றான் இங்கே கம்பன் வார்த்தையைப் பாருங்கள்.
என் சேய் என்று இராமனைச் சொல்லி, நின்மகன் என்று பரதனைச் சொல்லுகின்றான். இதைத்தான் பற்று (attachment) என்று சொல்லுகின்றோம். இந்த வரத்தைத் தந்துவிட்டு தசரதன் மூர்ச்சை அடைந்தான். ஆம் அவன் மூச்சு இதோ அதோ என்று நின்றுவிடத் துடித்துக்கொண்டிருந்தது. இரவு முழுக்க இப்படியே சென்றது. ஒரு வழியாக பொழுது விடிந்தது.விடியலில் அயோத்திய நகரமக்கள் மன்னன் இராமன் முடிசூடும் மகத்தான காட்சியைக் காண்பதற்கு தயாரான நிலையில் இருந்தார்கள்.வசிஷ்டரோடு மற்றவர்களும் மகுடம் சூட்டுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தார்கள். கைகேயியும் தசரதனும் இருந்த கைகேயியின் மாளிகை தவிர மற்ற, இடங்கள் எல்லாம் ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு இருந்தன. ஜோதிட நூல் வல்லவர்கள் இராமனுக்கு முடிசூட்டும் வேளை நெருங்கிவிட்டது என்று தெரிவித்தனர் என்று கம்பன் எழுதுகின்றார். ஜோதிட நூல் வல்லாருக்கு “கணித நூல் உணர்ந்த மாந்தர்” என்று கம்பன் அடைமொழி கொடுக்கின்றான். அவர்களுக்கு இந்த விஷயத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.ஜோதிட நுட்பம் வல்லாருக்கும் விதியின் சில நுட்பமான சதிகள் புரியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் “நடக்காத வேலைக்கு நாள் எதற்கு?” என்றெல்லாம் அவர்கள் தசரதனுக்குச் சொல்லி இருக்க வேண்டும்.
‘‘நல்ல வேளை நெருங்குகிறது, ஏன் இன்னும் இராமன் வரவில்லை. போய் அழைத்து வாருங்கள்” என்று மட்டுமே அவர்கள் சொன்னார்கள். உடனே வசிஷ்டரும் சுமந்திரனை அழைத்து, தசரத மன்னனை அழைத்து வரச் சொல்லுகின்றான். அவன் கைகேயியின் அந்தப்புரம் வருகின்றான். அவனுக்கு அந்தப்புரத்தில் நுழைவதற்கு அனுமதி இல்லை. அந்தப்புரத்தில் கைகேயி வைத்தது தான் சட்டம். எனவே கைகேயியின் உதவியாளர்கள் கைகேயியிடம் சுமந்திரன் வருகையைச் சொல்ல கைகேயி சுமந்திரனுக்கு உத்தரவிடுகின்றாள். ‘‘நீ உடனே பிள்ளையை (இராமனை) அழைத்து வா.’’ பிள்ளை என்கிற வார்த்தையை கம்பன் எப்படி பயன்படுத்துகிறான் பாருங்கள். தனக்கு அன்பாக இதுவரை இருந்தவனும் பிள்ளைதான். தனக்கு எதிரியாக மாறுவதும் பிள்ளைதான்.பிள்ளை எதிரியாக முடியுமா என்றால் திருமங்கையாழ்வார் பாசுரத்தைக் கவனிக்க வேண்டும் திருவல்லிக்கேணி பாசுரத்தில் ‘‘பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப’’ என்று பிரகலாதனை பிள்ளை என்கிற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். பெற்ற தந்தையே விரோதியாக நின்றபொழுது பிள்ளை என்கிற வார்த்தையை திருமங்கையாழ்வார் பயன்படுத்துகின்றார். இங்கே வளர்த்த தாயே (கைகேயி) எதிரியாக நின்ற பொழுது அதே பிள்ளை என்கிற வார்த்தையை கம்பன் பயன்படுத்துகின்றான்.
அடுத்து தசரதனுக்கும் தனக்கும் நடக்கும் போராட்டங்கள் வெளியில் யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என் பதில் உறுதியாக இருப்பதால் பிள்ளை என்ற பொதுவான சொல்லைப் பயன்படுத்துகிறாள்.சுமந்திரனுக்கு உண்மை புரியவில்லை. அவன் புளகாங்கிதம் அடைந்து விட்டான். இராமனை முடிசூட்டி கொள்வதற்கு முன் ஆசி தரத்தான் கைகேயி அழைக்கிறாள் என்று எண்ணுகிறான்.தசரதன் பெரும்பாலும் கைகேயின் மாளிகையில் இருப்பான் என்பது தெரிந்ததால், கைகேயிடமும் தசரதனிடமும் ஆசிகள் பெற்றுக்கொண்டு மணிமண்டபம் சென்று மணிமுடியை சூடிக் கொள்வான் இராமன் என்று அவன் எண்ணுகின்றான். சுமந்திரனுக்கு கைகேயின் மாளிகையில் நடந்த போராட்டங்கள் புரிய வில்லை. காரணம், கைகேயியின் மனது கட்டிய கணவனாக தசரதனுக்கே சற்று முன் தானே புரிந்தது. தசரதனுக்கே அப்பொழுதுதான் புரிந்தது என்றால் சுமந்திரனுக்கு எப்படிப் புரியும்?அது மட்டுமல்ல கைகேயியை விட ராமனிடம் அன்பு கொண்டவள் அயோத்தியில் யாரும் இருக்க முடியாது என்ற நம்பிக்கை கலையாமல் இருந்தது. சுமந்திரனுக்கு.
அதனால்தான் அவன் மனதில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. அவன் மகிழ்ச்சியோடு இராமனிடத்திலே சென்று ‘‘உன்னுடைய அன்னை அழைக்கின்றாள். நீ அன்னையிடம் ஆசி பெற்றுக்கொண்டு மணிமகுடம் சூட்டிக் கொள்ளலாம்.’’ இப்பொழுது இராமனுக்கும் மகிழ்ச்சி. ஆம்; தன்னை வளர்த்த அன்னையிடம், தான் மணிமுடி சூடிக்கொள்வதற்கு முன் ஆசிகள் பெற வேண்டும் என்று மகிழ்ச்சியோடு தேர் ஏறிச் செல்கிறான்.இராமன் மணிமுடி சூடிக் கொள்வதற்காகத்தான் இத்தனை ஆர்வத்தோடு தேரில் செல்லுகின்றான் என்று வழியில் இருந்த மாந்தர்கள் எல்லாம் பார்த்தார்கள். அப்பொழுது அவர்கள் எல்லாம் தங்களுக்கு மன்னனாக வரப் போகின்ற இராமனைப் பற்றி பல்வேறு விதமாக ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு பேசுகின்றனர்.தேர் கைகேயியின் மாளிகை முன் நின்றது. இராமன் சட்டென்று சில மாற்றங்களை உணர்கிறான். அந்த அரண் மனைக்குள் நுழையும்போது கம்பீரமாக வீற்றிருக்கக்கூடிய தசரதனைக் காணவில்லை அதற்குப் பதிலாக கைகேயியே நின்று கொண்டிருக்கிறாள்.
தேஜஸ்வி