அருமனை: கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களில் முறையான சாலை வசதி இல்லாததால் பழங்குடி மக்கள் சிரமமடைந்துள்ளனர். கடையாலுமூடு பேரூராட்சியின் 4வது வார்டுக்கு உட்பட்ட ஒருநூறாம்வயல் பகுதியில் இருந்து கடம்பாவயல் மற்றும் கீமலை வரையுள்ள மலை கிராமங்களில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். இந்த குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் முறையான சாலை வசதி இல்லாதது முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்த கிராமங்களில் இருந்து சாலைக்கு செல்ல வேண்டுமெனில் சுமார் 1 கி.மீட்டர் தூரத்துக்கு சிறிய நடைபாதை வழியாக நடந்துதான் செல்ல முடியும். எனவே கிராமங்களில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் அந்த நோயாளிகளை தோளிலோ அல்லது தொட்டில் போலவோ தூக்கிக்கொண்டு தான் சாலைக்கு வர முடியும்.
பின்னர் அங்கிருந்து முறையான மருத்துவ வசதி பெறுவதற்குள் நோயாளிக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. எனவே இந்த கிராமங்களை இணைக்கும் வகையில் முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குமுறுன்றனர். அதேபோல் இந்த கிராமங்களை சுற்றிலும் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதால் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு வெளியே செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விரைவில் இங்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்தி தரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.