சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2009ம் ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டபோது, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதம், 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதிக்குபிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓர் ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது.
சம வேலைக்கு சம ஊதியத்தை வலியுறுத்தி இந்த ஆண்டு துவக்கத்தில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, ஊதிய முரண்பாட்டை களைய அரசு சார்பில் நிதித் துறைச் செயலாளர் (செலவினம்) தலைமையில் குழு அமைக்கப்பட்டதை அடுத்து, இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தக் குழு அமைக்கப்பட்டு 9 மாதங்கள் கடந்த நிலையில், அவர்களுடைய கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதோ என்ற அச்சத்தில் அவர்கள், கடந்த 27ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மீண்டும் ஈடுபட்டுள்ளனர். இவர்களோடு பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரியும் சிறப்பாசிரியர்களும் தங்களுடைய கோரிக்கையினை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது மாணவ, மாணவியரின் கல்வியினை பாதிக்க வழிவகுக்கும். முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மேலும் காலம்தாழ்த்தாமல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு முரண்பாட்டினை உடனடியாக களையவும், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.