Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வலுக்கும் போராட்டம்

மோசடிகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் குரல் கொடுத்துள்ளன. ‘‘நீட் தேர்வு என்பது ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவ கனவை தகர்க்கிறது. தகுதி என்ற பெயரில், அவர்களை மருத்துவக்கல்வி பயிலவிடாமல் தடுக்கிறது. இது, சமூகநீதிக்கு எதிரான தேர்வு முறை. சமத்துவம் இல்லாத தேர்வு முறை. கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கக்கூடிய தேர்வு முறை. அவர்களது கல்வி உரிமைக்கு தடைபோடும் தேர்வு முறை. ‘நீ டாக்டர் ஆக முடியாது’ என அவர்களை ஓரம்கட்டும் தேர்வுமுறை. நீ தகுதியில்லாதவன் எனக்கூறி, தடுப்புச்சுவர் எழுப்பும் நடைமுறை’’ என பல்வேறு எதிர்ப்பு கணைகளை திமுக அரசு வீசிவருகிறது.

ஆனாலும், ஒன்றிய பாஜ அரசு அடங்க மறுக்கிறது. ஒருபுறம் மோசடிகள் பல அரங்கேறினாலும், இன்னொரு புறம் நீட் தேர்வுமுறையை கைவிட மாட்டோம் என ஒன்றிய பாஜ அரசு தனது பிடிவாத போக்கை தொடர்கிறது. இனியும், இந்த பிடிவாத போக்கை அனுமதிக்க முடியாது என தற்போது எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. நீட் தேர்வு ரத்துகோரி தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. இது, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு, ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு சாதகமாகவும், வசதி படைத்தோருக்கு பயனுள்ளதாகவும் இருப்பதால், இதை ரத்துசெய்ய வேண்டும் என திமுக மாணவர்அணி சார்பில் சென்னையில் வரும் ஜூலை 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நீட் தேர்வு மோசடி குறித்து விவாதம் நடத்தவேண்டும் என ராஜ்யசபாவில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதி மறுத்துள்ளதால், இந்த விவகாரம் ராஜ்யசபாவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இதேபோல், லோக் சபாவிலும் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கும் ஒன்றிய அரசு அசைந்து கொடுக்கவில்லை. அதனால், லோக் சபாவிலும் நீட் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆள்மாறாட்டம் செய்வது - வினாத்தாள்களை திருடுவது - விடைத்தாள்களை மாற்றி வைப்பது - மதிப்பெண்கள் வழங்குவதில் குளறுபடிகள் என பல மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்த பின்னரும், ஒன்றிய அரசு விழித்துக்கொள்ளாமல் இருப்பது ஏன்? என பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.

நீட் தேர்வில், கடந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், நடப்பாண்டில் மட்டும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது எப்படி? அதிலும், ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதற்கெல்லாம் மேலாக 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள்கூட, நீட் தேர்வில் 700-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றிருப்பது நீட் தேர்வு குளறுபடிகளின் உச்சமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2020-ம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேடு செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். 2021-ம் ஆண்டு தேர்வில் முறைகேடு செய்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டனர். பெரும் மோசடியாக உள்ள இந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யும் வரை நாடு முழுவதும் போராட்ட அலை ஓயாது. தமிழகம் ஒருபோதும் பின்வாங்காது. எதிர்கட்சிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது நல்லது. குறிப்பாக, மாணவர் சமுதாயத்துக்கு நல்லது. இல்லையேல் போராட்டம் தொடர்வதை தடுக்க முடியாது.