இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அந்நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு அந்நாட்டு மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி, பெரும் கிளர்ச்சியாக வெடித்தது. மாணவர்களின் தொடர் போராட்டத்தால், கடந்த 5ம் தேதி பிரதமர் இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர். அந்த இல்லத்தையே சூறையாடிய நிலையில், ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பித்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இடைக்கால அரசின் பிரதமராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பொறுப்பேற்றுள்ள சூழலில், இன்னும் மாணவர்களின் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. 400க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் ஊழல் புரிந்திருப்பதாக கூறி போராட்டத்தை தொடர்ந்த நிலையில், வங்கதேசத்தில் வங்கி ஆளுநர் அப்துர்ரூஃப் தாலுக்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை நிதி அமைச்சகம் ஏற்காத நிலையில், பதவியில் நீடிக்கிறார்.
இப்படி நாட்டில் அசாதாரண நிலை இருக்கும்போது நேற்றைய தினம், வங்கதேசத்தின் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன், அனைத்து நீதிபதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக அறிவித்து, அதற்கான ஏற்பாட்டை செய்தார். இதை அறிந்த மாணவர்கள் அமைப்பினர், சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிட்டு, தலைமை நீதிபதியால் சதி திட்டம் தீட்டப்படுகிறது, அவர் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தீவிர விசுவாசி எனக்கூறி போராட்டம் வெடித்தது.
நீதிமன்றம் முழுவதும் மாணவர்கள் புகுந்திருக்க, அக்கூட்டத்தை தலைமை நீதிபதி ரத்து செய்தார். அவர் தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தால்தான் வெளியேறுவோம் என மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தியதையடுத்து, தன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் அறிவித்தார். ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும் நீடித்திருக்கும் மாணவர்களின் போராட்டத்தால் வங்கதேசமே அசாதாரண சூழலில் இருக்கிறது.
சிறுபான்மை மக்களான இந்துக்கள் மீது தொடர் தாக்குதல் நடக்கிறது. இதனால், இந்துக்களும், அங்கு வணிகம் செய்பவர்களும், மாணவர்களும் அகதிகளாக இந்தியாவிற்கு வர எல்லையை நோக்கி படையெடுத்துள்ளனர். இந்திய எல்லையில் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வர காத்திருக்கின்றனர். இதனால், நம் நாட்டின் எல்லையிலும் பதற்றம் நிலவுகிறது. எல்லையில் நிலவும் பதற்றத்தை தடுக்கவும், ஊடுருவலை தவிர்க்கவும் 2000க்கும் அதிகமான ராணுவத்தினரை இந்தியா குவித்திருக்கிறது.
அவர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். வங்கதேசத்தில் நிலவும் கிளர்ச்சியை கட்டுக்குள் கொண்டு வர, இடைக்கால அரசு அமைத்துள்ள முகமது யூனுசை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அங்குள்ள மாணவர்கள் அமைப்பினர், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து சுதந்திரமான ஆட்சிக்கு வழிவகுக்கும் வரையில் பிரச்னை நீடிக்கும் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும் முதலில் மீண்டும் தொடங்கிய மாணவர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்துவது அந்நாட்டு அரசின் தலையாய கடமையாக உள்ளது. அதை செய்தால் மட்டுமே, இலங்கை, சிரியா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறியது போன்ற சூழலை தடுக்க இயலும்.