லண்டன்: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எதிராக சொந்த கட்சியிலேயே எதிர்ப்பலை அதிகரித்துள்ளது. ரிஷி சுனக் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அவரது கட்சி உறுப்பினரே கடிதம் கொடுத்திருப்பதால் பதவிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் ஆரம்பத்தில் இருந்தே பொதுமக்களின் நம்பிக்கையை பெறத் தவறிவிட்டார். இவர் மீது இங்கிலாந்து மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இப்போது சொந்த கட்சியிலும் ரிஷி சுனக்கிற்கு எதிராக கடுமையான எதிர்ப்பலை வீசத் தொடங்கி உள்ளது.
சமீபத்தில் பாலஸ்தீன போராட்டங்களுக்கு ஆதரவாக லண்டன் போலீசார் செயல்படுவதாக குற்றம்சாட்டிய உள்துறை அமைச்சரான சுயல்லா பிரேவர்மனை ரிஷி சுனக் டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை எடுத்தார். சுயல்லாவின் பேச்சு கடுமையான சர்ச்சையானதால் வேறு வழியின்றி அவரை டிஸ்மிஸ் செய்த ரிஷி சுனக் மந்திரி சபையை மாற்றி அமைத்து புதிய வெளியுறவு அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனை நியமித்துள்ளார். கட்சியிலும் ஆட்சியிலும் தன் மீதான அதிருப்தியை போக்கும் முயற்சியாகவே அனுபவம் வாய்ந்த கேமரூனை ரிஷி சுனக் கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கேமரூர் பிரதமராக இருந்த காலத்தில்தான் பல்வேறு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு கேமரூன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பொது வாக்கெடுப்பில் மக்கள் பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்தவர்தான் கேமரூன்.
ஏழு ஆண்டுக்குப் பிறகு இவர் மீண்டும் அமைச்சரவைக்கு திரும்புவது நல்ல பலனை தரும் என சுனக் எதிர்பார்க்கிறார். ஆனால் அதே சமயம், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஆன்ட்ரியா ஜென்கின்ஸ் ரிஷி சுனக்கிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பான கடிதத்தைக் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஜென்கின்ஸ் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தீவிர ஆதரவாளர். போரிஸ் ஜான்சனுக்கும் ரிஷி சுனக்கிற்கும் எப்போதும் ஆகாது. ரிஷி சுனக்கிற்கு பிரதமர் பதவி செல்வதைத் தடுக்க போரிஸ் தன்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் பார்த்தார். இப்போது ரிஷி சுனக்கை கவிழ்க்க சரியான சந்தர்ப்பம் வந்துள்ளதால் அதை பயன்படுத்தி ஜென்கின்ஸ் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான காய் நகர்த்தி உள்ளார்.
ஜென்கின்ஸ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘அனுபவித்த வரை போதும். நான் எனது நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்த கடிதத்தை சமர்பித்துவிட்டேன். ரிஷி சுனக் போகும் நேரம் வந்துவிட்டது. வேறு ஒரு நல்ல கன்சர்வேடிவ் தலைவர் நாட்டை வழிநடத்தட்டும்’’ என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் தீர்மானம் நாடாளுமன்றத்தில் முடங்கி நின்ற போது துணிச்சலாகப் போராடியவர் தனது தலைவர் போரிஸ் ஜான்சன் என்று குறிப்பிட்ட அவர், அப்படி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை ரிஷி சுனக் தான் நீக்கியதாகக் குற்றஞ்சாட்டி உள்ளார். உண்மையைப் பேசியதற்காகவே உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் பதவிநீக்கம் செய்யப்பட்டதாகவும் ரிஷி சுனக் இடதுசாரியாக மாறுவதாகவும் ஜென்கின்ஸ் சாடியுள்ளார். ரிஷி சுனக்கிற்கு எதிராக மேலும் 5 எம்.பி.க்களும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக கடிதம் எழுதி உள்ளனர்.
இது ரிஷி சுனக் பதவிக்கே ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே கடந்த 4 பிரதமர்களைப் போலவே ரிஷி சுனக்கும் பதவிக்காலம் முன்பாகவே ராஜினாமா செய்வாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்தில் அடுத்த பொதுத் தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
* அடுத்தடுத்து ராஜினாமா
கடந்த சில ஆண்டுகளாகவே, இங்கிலாந்தில் பிரதமராக பொறுப்பேற்பவர்களுக்கு நேரமே சரியில்லை. 6 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த 2010ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், 3 ஆண்டில் தெரசா மே, பின்னர் அடுத்த 3 ஆண்டில் போரிஸ் ஜான்சன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். 2022ல் லிஸ் டிராஸ் வெறும் 49 நாளில் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அதன்பின் பிரதமர் ஆக பொறுப்பேற்றவர்தான் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக். இப்போது இவர் தலைக்கு மேலேயும் கத்தி தொங்கத் தொடங்கி விட்டது.
* 53 எம்.பி.க்கள் ஆதரவு தேவை
கன்சர்வேடிவ் கட்சி சட்டவிதிகள்படி தங்கள் கட்சியை சேர்ந்த பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொணடு வர வேண்டும் என்று 53 எம்.பி.க்கள் கடிதம் எழுதினால், வாக்கெடுப்பு நடத்தப்படும். ஆனால், தற்போதுவரை 6 எம்.பி.க்கள் மட்டுமே ரிஷிசுனக்கிற்கு எதிராக கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்களில் 80 முதல் 100 பேர் ரிஷி சுனக்கிற்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் பல கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கின்றனர். 49 நாளில் பிரதமர் பதவியை இழந்த லிஸ் டிரஸ் அணியில் 50 பேர் உள்ளனர். அண்மையில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுயல்லா பிரேவர்மனை 10 பேர் ஆதரிக்கின்றனர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சிக்கு 350 எம்.பி.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.