ஊட்டி: ஊட்டியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில் தாவரவியல் பூங்காவில் மரம் விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரு சில தினங்களுக்கு காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதற்கு ஏற்றார் போல் கடந்த ஒரு வார காலமாக நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால் நேற்று இரவு மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவாயில் பகுதியில் இருந்து டாப் கார்டன் செல்லும் சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊட்டி தீயணைப்பு துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து தொடங்கியது. இதேபோல் ஊட்டியில் இருந்து பார்சன்ஸ்வேலி பகுதிக்கு செல்லும் சாலையில் மரம் ஒன்று விழுந்தது. இதனையும் தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர். தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மரம் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.