*உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் எச்சரிக்கை
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் வாகனங்கள் சேதமடைவதை தவிர்க்கும் விதமாக அதிக மரங்கள் உள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்த கூடாது என எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் குந்தா சுற்று வட்டார பகுதிகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பொழிவு உள்ளது.
எனவே சுற்றுலா பயணிகள் குந்தா சுற்று வட்டார பகுதிகளுக்கு வருகை புரிவதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மரங்கள் அதிகமுள்ள பகுதிகளுக்கும், நீர்நிலைகளுக்கு அருகில் செல்லவோ வேண்டாம். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது.
வாகனங்களை சாலையோர மரங்களின் அடியிலோ, பராமரிப்பு இல்லாத கட்டிடங்கள் அருகிலோ நிறுத்த கூடாது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கூடுதலாக இருப்பு வைத்து கொள்ள வேண்டும். அனுமதியின்றி வனங்களுக்குள் நுழைய வேண்டாம். அத்தியாவசிய பணிகள் தவிர்த்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பலத்த காற்று காரணமாக ஊட்டியில் பல இடங்களிலும் வாகனங்கள் மீது மரங்கள் விழுந்து சேதமடைந்தன. இந்நிலையில் மழை காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புள்ளனர்.
இதனால் ஊட்டி நகரம் வெறிச்சோடியுள்ளது. இதனிடையே மரங்கள் மற்றும் அபாயகர சுவர்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்த கூடாது என எச்சரிக்கை பலகைகள் வைக்க அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டார்.
இதன் பேரில் ஊட்டி – கூடலூர் சாலையில் அதிக கற்பூர மரங்கள் உள்ள ஊசிமலை பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம் என எச்சரித்து வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை நடுவட்டம் பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டது. இதேபோல் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோல் எச்சரிக்கை பலகைகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.