நன்றி குங்குமம் டாக்டர்
சமீப காலமாகவே, மனிதனைக் கொல்லும் நோய்களில் பக்கவாதத்துக்கு இரண்டாவது இடம். வயது ஏறயேற, பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். 75 வயதுக்கு மேல் ஐந்தில் ஒரு பெண்ணுக்கும், ஆறில் ஒரு ஆணுக்கும் பக்கவாதம் வருவதாகவும். அதாவது, உலகில் இரண்டு நொடிக்கு ஒருவருக்கு பக்கவாதம் நிகழ்வதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால், 2050 – க்குள், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் 80% பேருக்கு பக்கவாதம் வர வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கணிப்பு தெரிவிக்கிறது.
அது போன்று, பக்கவாதம் வந்த பத்து பேரில், மூன்று பேருக்குத் திரும்பவும் வரும் அபாயம் உண்டு. எட்டில் ஒருவர் 30 நாட்களிலும், நான்கில் ஒருவர் ஒரு வருடத்திலும் இறந்துவிடுகிறார்கள். எனவே, பக்கவாதம் வருமுன் தவிர்ப்பதே நல்லது. அந்தவகையில், பக்கவாதம் ஏன் ஏற்படுகிறது, அதன் அறிகுறிகள், சிகிச்சை முறை, தீர்வு குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் நரம்பியல் மருத்துவர் வி. சதிஷ்குமார் பக்கவாதம் என்றால் என்ன.., எதனால் ஏற்படுகிறது?
பக்க வாதம் என்பது மனித உடலின் ஒரு பக்கம் – இடது அல்லது வலது பக்க முகம், கை, கால் – செயலிழப்பது என்று கூறலாம். நன்றாக ஓடி, ஆடி வேலை செய்துகொண்டிருக்கும் ஒருவர், திடீரென ஒரு பக்கம் கை, கால் செயலிழப்பதால், படுத்த படுக்கையாகிவிடும் அபாயம் ஏற்படுத்துவதே பக்கவாதம் என்கிறோம். இந்த பக்கவாதம் ஹார்ட் அட்டாக், புற்றுநோய்க்கு அடுத்தபடியாக உயிரைப் பறிக்கும் ஒரு நோயாகக் கருதப்படுகிறது. ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தக் கூடிய அத்தனை காரணங்களும் பக்கவாதத்துக்கும் காரணமாகிறது.
உதாரணமாக, மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் மாற்றங்களினாலோ அல்லது அவற்றில் ஏற்படும் அடைப்புகளாலோ அல்லது ரத்த நாளங்களின் வெடிப்புகளால் ஏற்படும் ரத்தக் கசிவுகளாலோ மூளையின் சில பகுதிகள் செயலிழக்கச் செய்வதால் ஏற்படும் திடீர் விபத்து இது. அதிக ரத்த கொதிப்பு, அதிக சர்க்கரை, அதிக கொலஸ்ட்ரால் , புகைபிடித்தல், உடல்பருமன் இதெல்லாம்தான் பொதுவான காரணங்களாக பார்க்கப்படுகிறது.
பக்கவாதம் யாருக்கெல்லாம் வரும் வாய்ப்புண்டு…
இது பொதுவாக வயதானவர்களுக்கு வரும் ஒரு நரம்பு மண்டலம் சார்ந்த ஒரு நோய். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை 65-80 வயது வரை உள்ளவர்களுக்குதான் ஏற்பட்டு வந்தது. ஆனால், கொரோனாவுக்கு பிறகு இளம் வயதுக்காரர்களுக்கும் பக்கவாதம், ஹார்ட் அட்டாக்கும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் இரண்டு விதமாக பிரிக்கலாம். ஆதாவது, குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா என ஒருவரது பரம்பரையில் முன்பு யாருக்காவது பக்கவாதம் ஏற்பட்டு இருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்த மற்ற நபர்கள் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. இது ஜீன் காரணமாக வருவது.
அடுத்தது, வயது ஆவதால் ஏற்படும் நரம்பு தளர்வுகளால் ஏற்படும் பக்கவாதம். குழந்தைகளுக்கு ரத்தத்தில் மாற்றங்கள் (பரம்பரை வியாதிகள்), ரத்தக்குழாய்களின் குறைபாடுகள், இதய வால்வுகள் பாதிப்பு எனப் பல காரணங்களினால் ஸ்ட்ரோக் வரலாம். விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைத் தடுக்கி விழுந்தும் பக்கவாதம் வருவதும் உண்டு.நாற்பது ஐம்பது வயதுக்குள் பக்கவாதம் வருவதற்கு டிபி போன்ற நோய்த் தொற்றுகளும் மற்றும் ரத்தக்குழாய் அழற்சிகளும் ( VASCULITIS – COLLAGEN VASCULAR DISEASES ) காரணமாகின்றன.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், உலகளவில் இந்திய மக்களே சர்க்கரை நோயால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை அளவு அதிகரிப்பதும் கூட பக்கவாதம் ஏற்பட ஒரு காரணமாகிறது. அதுபோல இப்போதுள்ள நவீன வாழ்க்கைமுறை மாற்றமும் கூட ஒரு காரணமாகிறது. உதாரணமாக, தற்போது உடல் உழைப்பு குறைந்து நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது அதிகரித்துள்ளது.
எனவே, உடல் உழைப்பு குறைய குறைய நோய் அபாயங்கள் அதிகரிக்கும் வாய்ப்புண்டு. ஏனென்றால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பது என்பது நீண்ட நாள் புகைபழக்கத்துக்கு ஆளாவதற்கு சமமாகும். இன்றைய நவீன உணவு பழக்கங்கள், உப்பு, சர்க்கரை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது கூட பக்கவாதத்திற்கு வழிவகுக்கிறது.
பொதுவான காரணங்கள்
வயது, பாலினம், இனம் சார்ந்து வரும் ஸ்ட்ரோக் நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் நம்மிடம் இது குறித்த தகுந்த விழிப்புணர்வு இருந்தால் ஸ்ட்ரோக் வருவதைத் தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.
1.ரத்த அழுத்தம் (BP)
2.சர்க்கரை நோய் (DIABETES)
3.கொலெஸ்டிரால் (ATHEROSCLEROSIS)
4.புகை பிடித்தல், மது அருந்துதல்
5.உடல் பருமன் (OBESITY)
6.உடற்பயிற்சியின்மை (SEDANTARY LIFE)
7.இதயநோய்கள்
8.தமனிகள், சிரைகள் சார்ந்த நோய்கள் இவையெல்லாம் ஸ்ட்ரோக் வரும் ஆபத்தை அதிகரிக்கின்றன.
அறிகுறிகள்
பக்கவாதத்தின் அறிகுறிகளை பொருத்தவரை, சில நிமிடங்களே இருக்கக்கூடிய செயலிழப்புகள் – சிலருக்குப் பார்வைக் கோளாறுகள், மயக்கம், பேச்சில் மாற்றம், வலிப்பு போன்றவை வரக்கூடும். ஆனால், அது உடனே சரியாகிவிடும். இதனால், பெரும்பாலானவர்கள் அதனை உதாசீனப்படுத்திவிட்டு, அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். ஆனால், இவை ஏற்பட்ட பின், அடுத்த மூன்று நாட்களிலோ, ஒருவாரத்திலோ அல்லது ஒரு மாதத்திலோ பக்கவாதம் ஏற்படலாம். எனவே, இதுபோன்ற அறிகுறிகளை, எச்சரிக்கையாகக் கருதி, அப்படி அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி தங்களை முழுமையாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
சிகிச்சை முறை
ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட முதல் 4 மணி நேரத்திற்குள், அருகில் உள்ள பக்கவாதத்திற்கான சிறப்பு மருத்துவமனைகளுக்கு செல்வது மிகவும் அவசியமாகும். ஏனென்றால், முதல் 4 மணி நேரத்தை கோல்டன் பீரியட் என்று மருத்துவ உலகில் சொல்கிறோம். 4 மணி நேரத்திற்குள் சென்றுவிட்டால், தற்போதுள்ள நவீன மருத்துவ வசதிகளால், மருந்துகள் மூலம் அடைப்பை நீக்க முடியும். தாமதம் செய்வது, நாள் கடத்துவது, நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திவிடக் கூடும்.
மேலும், மூளையில் பெரிய ரத்தக் குழாய்களில் அடைப்பு (ஒருபக்க மூளையே செயலிழக்கும் அபாயம்), அதிகமான ரத்தக்கசிவு (MASSIVE HEAMORRHAGE) இவைகள் நோயாளியைக் கோமா நிலைக்குத் தள்ளிவிடும் அபாயமும் உண்டு. எனவே, பக்கவாதம் வந்த உடனே உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். அதுபோல், எந்த முதலுதவி செய்வதோ அல்லது தண்ணீர் கொடுப்பதோ கூடாது. அவையும் பிரச்னையை அதிகரித்துவிடும்.
எனவே, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அது தனியார் மருத்துவமனை என்றில்லை ஜி.எச் போன்ற அரசு மருத்துவமனைகளிலும் தற்போது இதற்கான அவசர சிகிச்சைகள் கிடைக்கிறது. எனவே, ஸ்ட்ரோக் ஏற்பட்ட 24 மணிநேரத்திற்குள், ரத்தக்குழாயில் எங்கு அடைப்பு இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டால் ஓரளவு குணப்படுத்திவிட முடியும்.
பரிசோதனைகள்
பக்கவாதத்தை பொருத்தவரை, என்ன காரணத்தினால் ஏற்பட்டது என்பதை சிடி, எம்ஆர்ஐ போன்ற ஸ்கேன்கள் மூலம் முதலில் கண்டறிய வேண்டும். ஏனென்றால் அதற்கு தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. உதாரணமாக, ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்புக்கும், ரத்தக் கசிவுக்கும் சிகிச்சை முறைகள் வேறுபடும். அதனால், தாமதம் செய்யாமல் மருத்துவர் ஆலோசனையுடன் இந்த பரிசோதனைகள் செய்வது அவசியம்.
பக்கவாதத்திற்கு பின் உணவு முறையில் மாற்றம் தேவையா..
நிச்சயமாக, உணவு முறையில் மாற்றம் தேவைப்படும். ஏனென்றால் ஒருவருக்கு பக்கவாதம் வந்த பிறகுதான் தெரியவரும் அவரது உடல், எதனால் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று. உதாரணத்திற்கு ஒருவருக்கு கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டிருந்தால், அவர் அதன்பின்னர், கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இதுபோல் எந்த காரணமோ, அதற்கு தகுந்தவாறு உணவுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பொதுவாக, உப்பு, காரம் கூடுதல் சுவைக்காக ரசாயள கலப்பு சேர்த்த வெளி உணவுகள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதுபோன்ற அதிகளவில் எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளை சேர்த்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். பொதுவாக, சைவ உணவுகளையே அதிகம் உண்பது நல்லது. அசைவ பிரியர்களாக இருந்தால், முதல் ஆறுமாதம் வரை அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. அப்படியே எடுத்துக் கொள்ள விரும்பினாலும், எண்ணெயில் பொரித்த வறுத்ததாக இல்லாமல், வேக வைத்ததை எடுத்துக் கொள்ளாலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
பக்கவாதத்தில் இருந்து தற்காத்து கொள்ள ..
பக்கவாதம் ஏற்படுத்தும் ஊனங்கள், ஒருவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடும். கை, கால் செயலிழத்தல், பார்வை குறைவு அல்லது இழப்பு, பேச முடியாமை, சிறுநீர் மலம் கட்டுப்பாடில்லாமை, விழுங்குவதில் சிரமம், ஒருபக்கம் உணர்ச்சிகள் இல்லாமை போன்றவை உயிருக்கு ஆபத்தில்லையென்றாலும், பிறரை சார்ந்து இருக்க வேண்டிய ஒரு வாழ்க்கையைக் கொடுத்துவிடும். எனவே, மேலே சொன்னபடி பக்கவாதம் வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பிளட் பிரஷர், சர்க்கரை, கொலெஸ்டிரால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். புகை பிடித்தல் கூடாது. தினமும் உடற்பயிற்சி, நடைப் பயிற்சி, யோகா, தியானம் செய்வது நல்லது.
ஆனால், இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது என்னவென்றால், ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு
மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனென்றால், இன்றைய சூழலில் பக்கவாதம் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனவே, அப்படி வந்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.
அதாவது, ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதும் எந்தவித முதலுதவியும் செய்யக் கூடாது. அதுபோல், தங்களது பேமிலி டாக்டரிடம் சென்று அவரை பார்க்க அபாயின்மென்ட் வாங்கிக் கொண்டு காத்திருக்கக் கூடாது. அதனால் ஒவ்வொருவருமே, பக்கவாதத்திற்கான சிறப்பு மருத்துவமனைகள் அருகில் எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது உடனடியாக ஜி.எச்.போன்ற அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
அதுபோல், வருமுன் காப்பது நலமே. எனவே, 30 வயதுக்குப் பிறகு வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களை முழு உடல் சோதனை செய்து கொள்வது நல்லது. பக்கவாதம் ஏற்பட்ட பின் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறை பிஸியோதெரபி (இயன்முறை சிகிச்சை) மிகவும் முக்கியமான சிகிச்சை முறை. தசைகளின் விறைப்பைக் குறைக்கவும், சக்தியைக் கூட்டவும் அவசியமானது. பிஸியோதெரபியைத் தவிர்த்தால், தசைகள் கெட்டிப்பட்டு விடும். அதுபோலவே பேச்சுப் பயிற்சியும் முக்கியம்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்