சென்னை: வேலை நிறுத்த போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, சென்னை துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் கன்டெய்னர் லாரிகள் இயங்குகின்றன. இதற்காக ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்களையும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களையும் கொண்டு செல்ல கன்டெய்னர் 5 ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஒரு பிரிவினர், அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் (நவ.6) வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதில் மற்றொரு பிரிவினர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் வழக்கம்போல் கன்டெய்னர் லாரிகள் ஓடும் என்று கூறினர்.
இதனால், காசிமேடு துறைமுகம் நுழைவாயில் ஜீரோ கேட் பகுதியில் காசிமேடு மீன்பிடி துறைமுக ஆய்வாளர் சிதம்பர பாரதி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் ஒரு பிரிவினரால் நேற்று லாரிகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. திருவொற்றியூர், மணலி புதுநகர், எண்ணூர் ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகள் பொருட்களை கொண்டு செல்வதற்கும், இறக்குவதற்கும் வழக்கம்போல் இயங்கின. காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திலும் கன்டெய்னர் லாரிகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. இரு தரப்பு சங்கங்கள் மோதலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னை துறைமுகத்திலிருந்து செல்லும் கன்டெய்னர் லாரிகள் வழக்கம் போல் இயக்கப்படுவதால் எந்த பாதிப்பும் இல்லை.