*கம்புடன் சுற்றும் கிராம மக்கள்
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே 30க்கும் மேற்பட்டோரை தெருநாய் கடித்து குதறியது. நாய் இன்னும் பிடிபடாததால் பொதுமக்கள் கம்புடன் சுற்றி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி பகுதியில் நேற்று முன்தினம் தெருநாய் ஒன்று 30க்கும் மேற்பட்டோரை கடித்தது. இதில் காயமடைந்தவர்கள் வத்திராயிருப்பு, விருதுநகர், மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெருநாயை பிடிக்க முடியாமல் பேரூராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. நேற்றும் பொதுமக்கள், எருமை மாடு மற்றும் கன்றுக்குட்டியை அந்த தெருநாய் கடித்தது.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூமாபட்டி பேருந்து நிலையத்தில் எருமை மாடு, கன்றுக்குட்டியோடு சுமார் அரை மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
தெருநாய் பிடிபடாமல் சுற்றி திரிவதால் கூமாப்பட்டி கிராமம் முழுவதும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்காப்புக்காக கையில் கம்புடன் சுற்றி வருகின்றனர். நாய் அச்சம் காரணமாக நேற்று சில பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பேரூராட்சி நிர்வாகம் உடனே நாயை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.