குமாரபாளையம், நவ.7: குமாரபாளையத்தில் சாலையில் வருவோர் போவோரை கடித்து குதறும் தெருநாய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில், ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். தெருக்களில் செல்வோரை கடித்து குதறுவதால், நாய்களை கண்டாலே பலரும் அச்சப்படுகின்றனர். கடந்த வாரம் எல்விபி சந்து பகுதியில் ஓரு குழந்தையை நாய் கடித்து குதறியது. இதையடுத்து, நாய்களை கட்டுப்படுத்தக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா பாபு, நகர மகளிரணி அமைப்பாளர் உஷா, வார்டு நிர்வாகிகள் விமலவேணி, சூர்யா, கார்த்திக் ஆகியோர் நகராட்சி ஆணையாளர் சரவணனை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.