கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி 11வது வார்டான மேட்டு தெருவில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இதன் எதிரே இன்று காலை ஒரு புள்ளிமான் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, புள்ளிமானின் வால்பகுதிகளில் தெருநாய்கள் கடித்து குதறியிருப்பதை கண்டறிந்தனர்.
நள்ளிரவில் உணவு, குடிநீர் தேடி வந்த புள்ளிமானை, தெருநாய்கள் கடித்ததில் புள்ளிமான் இறந்திருப்பது தெரியவந்தது. தகவலறிந்து கும்மிடிப்பூண்டி வனத்துறை மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்த புள்ளிமானை மீட்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.