ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தெருநாய்கள் தொல்லையால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குளாகி உள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டியிலும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பாதித்து வருகின்றனர். இரவு நேரங்களில் ஊட்டி நகருக்குள் வரும் சுற்றுலா பயணிகள் அறைகளை தேடி செல்லும்போது, அவர்களை தெரு நாய்கள் விரட்டுவது வாடிக்கையாக உள்ளது.
அதேபோல் வெளியூர்களுக்கு சென்று திரும்பும் உள்ளூர் மக்களும் இரவு 10 மணிக்கு மேல் தெருக்களில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுமட்டும் இன்றி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளிலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக பூங்கா புல் மைதானங்களில் அடிக்கடி கூட்டமாக வலம் வரும் தெரு நாய்களால் சுற்றுலா பயணிகள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். தெருநாய்கள் சில சமயங்களில் சுற்றுலாப் பயணிகளை விரட்டுவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ஊட்டி உள்பட மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பெருகி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.