அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றி வருகின்றன. இந்த மாடுகள் திடீரென ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு ஓடுகின்றன. அப்போது, மாடுகள் மோதி, பொதுமக்கள் படுகாயமடைகின்றனர். எனவே, இந்த மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென, மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மாநகராட்சி 10வது மண்டல அதிகாரி உஷா, சுகாதார ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள், கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்தனர். பின்னர், ஒரு மாட்டுக்கு ரூ.2,000 அபராதம் என, 10 மாடுகளுக்கு ரூ.20 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் இருந்து வசூலித்தனர். இதையடுத்து, பிடித்த மாடுகளை புதுப்பேட்டையில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் அடைத்துவைத்தனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து வருகிறோம். ஆனால், மாட்டின் உரிமையாளர்கள் எங்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மாடுகளை மீட்டு செல்கின்றனர். இதனால் மாடுகளை பிடிப்பதில் தோய்வு ஏற்படுகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதற்கு மாடு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்,’’ என்றனர்.