ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, சேத்தூரில் படப்புகள் தீப்பற்றியதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான வைக்கோல் நாசமானது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, சேத்தூரில் உள்ள காவல்நிலையத்தின் பின்புறம் காலியிடம் உள்ளது. இந்த இடத்தில், அப்பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், 30க்கும் மேற்பட்ட வைக்கோல் படப்புகளை வைத்துள்ளனர். இந்த படப்புகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு பகுதியில் பற்றிய தீ, காற்றின் வேகத்தால் மளமளவென அடுத்தடுத்து இருந்த வைக்கோல் படப்புகளுக்கு பரவியது.
தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் இப்பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், காளிதாஸ், சுந்தரம், கருப்பசாமி உட்பட 6 பேரின் வைக்கோல் படப்பு எரிந்து நாசமானது. இவைகளின் சேத மதிப்பு ரூ.2 லட்சமாகும். விபத்து குறித்து சேத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.