சென்னை: அமைச்சர் உதயநிதி பேசிய கருத்தினை மடைமாற்றி அரசியல் ஆதாயம் அடைய முயல்வதா? என்று பாஜகவுக்கு எஸ்டி.பி.ஐ. தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்ட அறிக்கை: வருணாசிரம வர்க்க பேதத்தை வலியுறுத்தும் சனாதன கோட்பாடுக்கு எதிராக, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்தினை, குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிரான இனப்படுகொலை அழைப்பு என்பதாக, அமைச்சரின் கருத்தினை மடைமாற்றி அரசியல் ஆதாயம் அடைய பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் அவதூறு பரப்பி வருகின்றனர்.
இந்த செயல் கண்டிக்கத்தக்கது. அவதூறுகள் மூலமாக பாமர மக்களிடம் வெறுப்பை விதைக்கும் பாஜக தலைவர்கள் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு, அமைச்சர் உதயநிதிக்கு எதிராக கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டு வருகின்றது. அயோத்தியை சேர்ந்த ஒரு அகோரி, அமைச்சர் உதயநிதியின் தலைக்கு சன்மானம் அறிவித்து பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்த அகோரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், வழக்குப் பதிவுடன் நின்றுவிடாமல் அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தமிழகத்திற்கு கொண்டுவந்து ரிமாண்ட் செய்ய வேண்டும்.
ஒரு சாதாரண குடிமகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாலே கைது செய்யும் காவல்துறை, தமிழ்நாட்டின் முக்கிய அமைச்சருக்கு, முதல்வரின் மகனுக்கு பொதுவெளியில் கொலை மிரட்டல் விடுத்திருப்பதை சாதாரணமாக கடந்துவிடாமல் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவினரின் தொடரும் அவதூறு மற்றும் சங்பரிவாரின் கொலை மிரட்டல்களை கண்டு வேடிக்கை பார்க்காமல், சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் தமிழக அரசு ஒடுக்க வேண்டும், இத்தகைய நடவடிக்கைகளில் தமிழக அரசு துணிந்து களமாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.