மேட்டூர்: கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்துள்ளதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியிலும் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 24 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 17 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக மேலும் சரிந்துள்ளது. இருப்பினும் அங்குள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 21வது நாளாக நீடிக்கிறது.
இதேபோல், கர்நாடக அணைகளின் உபரிநீர் வரத்து காரணமாக கடந்த 30ம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. நேற்று 26 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 22,500 கனஅடியாக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் போக்கி மதகுகளில் இருந்து தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.