நன்றி குங்குமம் டாக்டர் ;வறுமையில் தவிப்பவர்கள், தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள், காதல் தோல்வியுற்றவர்கள் என்று சாமானிய நபர்கள் மட்டுமின்றி சினிமா, அரசியல், விளையாட்டு, தொழில் மற்றும் அரசுத் துறைகளைச் சேர்ந்த வசதி படைத்தவர்கள் பற்றியும் அவ்வப்போது ஏதாவதொரு தற்கொலை செய்தி வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இவற்றைத் தடுக்கும்விதமாக உலக தற்கொலை தடுப்பு சங்கமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் தேதியன்று சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தை (World Suicide Prevention Day) கடைபிடித்து வருகின்றன.;தற்கொலை எண்ணங்கள் தடுக்கப்படக் கூடியதே என்ற உண்மை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த சிறப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மன அழுத்தம், குற்ற உணர்வு, இயலாமை, வெட்கம், பாலியல் வன்முறைகள், காதல் தோல்வி மற்றும் திருமண முறிவு, தாம்பத்திய உறவில் சந்தேகம், திருமணத்துக்கு முந்தைய கர்ப்பம், குழந்தை இல்லாமை, கடுமையான உடல்வலி, மிகவும் சோர்வான நிலை, புற்றுநோய், பக்கவாதம் போன்ற தீராத உடல்நல பிரச்னைகள், தேர்வில் தோல்வி, போதை மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாதல், கடன் மற்றும் சொத்து பிரச்னைகள், வேலையின்மை அல்லது வேலை இழப்பு, வியாபாரம் அல்லது தொழிலில் பிரச்னை போன்ற பல காரணங்கள் தற்கொலை எண்ணம் ஏற்பட வழி வகுக்கிறது.; தான் மட்டுமே தோல்வியை சந்தித்து வருவதாகவும், தான் எதற்கும் பயன்படாத நபர், குடும்பமே என்னை வெறுக்கிறது, எல்லா பிரச்னைகளுக்கும் நான்தான் காரணம் என்பது போன்ற எண்ணங்களே தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. உங்கள் குடும்பத்தில் நண்பர்களிடம், சக ஊழியரிடம் மற்றும் உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். மாற்றம் ஏதாவது தென்பட்டால் சிறிது நேரம் ஒதுக்கிப் பேசுவதோடு, பிறருக்கும் உங்களுக்கும் உதவி செய்து கொள்ள உங்களை வலுவாக்கிக் கொள்ளுங்கள். அக்கறையும், இரக்க உணர்வும் உள்ள ஒருவர் மூலமாக கடினமான காலங்களில் சிறு நடவடிக்கை மூலம் தற்கொலை எண்ணமுடைய ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். பிறர் மேல் உங்களுக்கு அக்கறை இருந்தால் அவர்களை அணுகி, அவர்கள் பேச விரும்புகிறார்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்வில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவர ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். தற்கொலையைப் பற்றிப் பேசுவதனால் அந்த எண்ணத்தைத் தூண்டிவிட முடியாது. மாறாக அவர்களுடைய மனக் கலக்கத்தைக் குறைத்து சரியானதொரு புரிதலை ஏற்படுத்த முடியும். தற்கொலை எண்ணமுடைய நபரிடம் அதுபற்றி பேசுங்கள். அவர் என்ன நினைக்கிறார், என்ன உணர்கிறார் என்பதைத் திறந்த மனதுடன் கவனியுங்கள். இதுபோன்ற நபர்களை ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் போன்ற நம்பிக்கையான ஒருவருடன் தொடர்பு கொள்ள ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்குத் தேவையான சரியான ஆலோசனை பெற ஒரு மருத்துவர் அல்லது மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்வதற்கு உதவுங்கள். தற்கொலை ஆபத்து உடனடியாக நிகழும் என்று ஊகித்தால், அந்த சூழலில் அந்த நபரை தனியாக விட்டுச் செல்ல வேண்டாம். பிரச்னையை சரி செய்வதற்குரிய வல்லுநர் உதவியை நாடுவதோ, குடும்ப நபர்களுக்குத் தகவல் தெரிவிப்பதோ நல்லது. உயிருக்கு ஆபத்து விளைவிப்பவைகளைக் குறைப்பது, அகற்றுவது அல்லது ஒழிப்பது போன்ற நடவடிக்கைகள் தற்கொலையைத் தடுக்கும் முயற்சிக்கு அதிக பலனளிக்கும். தற்கொலை எண்ணமுடைய நபரின் மனநிலை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை போன்றவற்றைத் தெரிந்து கொள்வதற்காக எப்போதும் அவரோடு தொடர்பில் இருக்க வேண்டும். தற்கொலை எண்ணத்தோடு இருக்கும் ஒருவரைக் கண்டறிந்தால், அவரோடு பேசி திறந்த மனதோடு அவர் சொல்வதைக் கேட்டு உதவி செய்வதாக அவருக்கு நம்பிக்கையளிக்க வேண்டும். குடும்பமும் நண்பர்களும் இருந்த போதிலும், வாழ்க்கை வாழத் தகுதியற்றது, பயனற்றது என்றும் நம்பிக்கை வறண்டு, எதிர்மறை எண்ணங்களோடு தனிமையாக உணர்ந்தால், ஏன் இப்படி எண்ணுகிறீர்கள் என்று உங்களுக்கே தெரியாமல் இருந்தால் அதற்குரிய உதவியை நாட வேண்டும். நீங்கள் தனியாக இல்லை என்பதையும், உங்களுக்கான உதவியை சரியாக தேடினால் கண்டிப்பாக கிடைக்கும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை குடும்பத்தினர், நண்பர் அல்லது சக ஊழியரிடம் பேசுங்கள். தற்கொலையைப் பற்றிக்கூட பேசுவதும் நல்லதுதான். அது உங்கள் உணர்வு தெளிவடைய உதவியாக இருக்கும். மருத்துவர், மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறலாம். சுய உதவி அல்லது ஆதரவளிக்கும் குழுவில் சேரலாம். ஒரு குழந்தை வளரும் சூழலில் ஏற்படுகிற பிரச்னைகளை எதிர்கொண்டு அதைத் தாண்டிச் செல்வதற்கு தேவையான தன்னம்பிக்கையையும், மன வலிமையையும் அந்த குழந்தைக்கு ஊட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. அது மட்டுமல்ல அந்தக் குழந்தை தனக்கு ஏற்படுகிற பிரச்னைகளை பெற்றோரிடம் நம்பிக்கையோடு பகிர்ந்துகொள்ளும்படி வளர்க்க வேண்டும். நாம் வாழும் பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரியின் பிறப்பும், இறப்பும் இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டும். ஆனால் இன்று மனித உயிரின் பிறப்பினை மருத்துவர்களின் கையில் ஒப்படைத்து விட்டதோடு, இறப்பினை தற்கொலைகள் மூலம் தானாகவே தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலை மாற நம் ஒவ்வொருவரிடமும் மனதளவில் முற்போக்கான மாற்றங்கள் உருவாக வேண்டும். உடல் மற்றும் மனதளவிலான வலிகள் மற்றும் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் அதைத் தாங்கிக் கொள்வதோடு, வெற்றி தோல்விகளை சமமாக பாவிக்கும் மன பக்குவத்தை நம் ஒவ்வொருவரிடமும் உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். நம் மனதில் தன்னம்பிக்கை எண்ணம் வளர்ந்தால் தற்கொலை எண்ணம் ஒருபோதும் வராது. ;தன்னம்பிக்கையை வளர்ப்போம்… தற்கொலையைத் தவிர்ப்போம்! – க.கதிரவன்
stop suicide
previous post