Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சூளகிரி அருகே மண்ணில் புதைந்து கிடக்கும் பழங்கால கல்தூண் : பாதுகாக்க வலியுறுத்தல்

Soolagiri, Stone Pillarசூளகிரி : சூளகிரி அருகே எட்டு பட்டைகள் கொண்ட கல்தூண் ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் கிடக்கிறது. இக்கல்தூணை பாதுகாத்து, பராமரிக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம் காமன்தொட்டி ஊராட்சி கோபச்சந்திரம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் கல் தூண் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளரும், காமன்தொட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியருமான ஜெயலட்சுமி கூறியதாவது: கோபச்சந்திரம் கிராமத்தில் உள்ள சிறிய குன்றின் மீது, பிரசித்தி பெற்ற தட்சிண திருப்பதி கோயில் உள்ளது. திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதியின் அதே உருவத்தில், இக்கோயிலில் உள்ள பெருமாள் காட்சியளிப்பதால், சுற்றுவட்டார பகுதியில் இக்கோவில் மிகப் பிரபலம்.

திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள், இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தால், திருப்பதியில் உள்ள பெருமாளை கண்ட பலன் கிடைக்கும் என்பது, இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதனால் ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர். விஜயநகர பேரரசு காலத்தில் இருந்தே, இக்கோயில் மிக புகழ் பெற்று இருந்ததை இங்குள்ள கல்வெட்டுகள் விளக்குகின்றன.

அந்த வகையில், கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையின் அருகில், எட்டு பட்டைகளை கொண்ட ஒரு கல்தூண் மண்ணுக்குள் பாதி புதையுண்ட நிலையில் உள்ளது. அதில் சங்கு, சக்கரம், காளிங்க நர்த்தன கிருஷ்ணன், அலங்கார யானை, அன்னப் பறவைகள் மற்றும் பூத கணங்களின் உருவங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. இந்த கல் தூணில் சங்கு சக்கரம் பொறிக்கப்பட்டு உள்ளதால், நிச்சயமாக இந்த தூண் வைணவ கோயிலை சார்ந்ததாக இருக்க வேண்டும்.

அதன்படி பார்த்தால் அருகில் உள்ள தட்சிண திருப்பதி கோயிலுடன் இந்த கல்தூண் தொடர்புடையதாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. முந்தைய காலத்தில் கோயிலின் நுழைவு வாயிலில் உள்ள மண்டபக் கல்லாக இருக்க வாய்ப்புகள் அதிகம். தற்போது இப்பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், வரலாற்று பொக்கிஷமான இக்கல்தூணை பாதுகாத்து, பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.