புதுடெல்லி: நிறுவன நிதியை மோசடியாக வேறு செலவுகளுக்குப் பயன்படுத்திய அனில் அம்பானி உட்பட 25 பேருக்கு, பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட 5 ஆண்டுகளுக்குத் தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிதியை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துவதாக செபிக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட 2018-19 நிதியாண்டில் உள்ள நிறுவன கணக்குகளை செபி தணிக்கை செய்து, விசாரணை மேற்கொண்டது.
அப்போது, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவன நிர்வாகத்தில் உள்ள முக்கிய நபர்களான அமித் பாப்னா, ரவீந்திர சுதால்கர் மற்றும் பிங்கேஷ் ஷா ஆகியோர் உதவியுடன் அனில் அம்பானி தனது பிற நிறுவனங்களுக்கு கடனாக வழங்கியதும், இதற்கு வங்கி இயக்குநர்கள் ஆட்சேபம் தெரிவித்தும் தடுக்கப்படவில்லை எனவும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி, மற்றும் இதில் உடந்தையாக செயல்பட்ட 24 பேருக்கு தலா ரூ.21 கோடி முதல் ரூ.25 கோடி அபராதம் விதித்தது. மேலும், நிறுவன நிதியை வேறு பயன்பாடுகளுக்கு மோசடியாக பயன்படுத்தியதால், அனில் அம்பானி உட்பட 25 பேரும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 5 ஆண்டுக்கு ஈடுபட தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.