சென்னை: ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மீனவரை மீட்டு தாயகம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் உள்ள NOOH 1012 மற்றும் 1184, அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடி படகுகளில் வேலை செய்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில், பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.
அந்த மீன்பிடி படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும், மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்த நிலையில், பெத்தாலிஸ் அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை உடனடியாக கண்டுபிடித்து, இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெத்தாலிஸ் மனைவி ஷோபா ராணி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், ஓமன் நாட்டில் உள்ள, இந்திய தூதரகம் மூலம் பெத்தாலியை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு கடிதத்தில் கூறி உள்ளார்.