மதுரை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மதுரை கோரிப்பாளையம் மற்றும் மேலமடை சந்திப்புகளில் நடைபெறும் மேம்பால பணிகள், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் புதிய நீதிமன்றம் கட்டும் பணிகளை நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு செய்த அவர், நூலகம் துவங்கப்பட்ட ஓராண்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளதை பாராட்டி, அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட, பல திட்டப்பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த 5 சிறப்பு டிஆர்ஓக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், கிடப்பில் போடப்பட்டிருந்த 70 ரயில்வே மேம்பால பணிகளில் 30 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 40 பணிகளை முடிப்பதற்கான பணிகள் துரிதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் விபத்துக்களை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டியுள்ளார். இவ்வாறு தெரிவித்தார். நடிகர் விஜய் கட்சி துவங்கியது குறித்து கேட்டபோது, அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘‘யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம். அது, அவரவர்களின் ஜனநாயக உரிமை. திமுகவிற்கு எந்த கட்சியையும் தடுத்து நிறுத்துவது நோக்கமில்லை. இந்தியாவிலேயே 75 ஆண்டுகள் பவளவிழா கொண்டாடும் ஒரே கட்சி திமுக மட்டும் தான். 40 ஆண்டுகாலம் கலைஞரின் நண்பராக இருந்த ஒருவர், கட்சி துவங்கி தேர்தலில் வெற்றி பெறவும் செய்தார். நடிகர்கள் நாடாள முடியுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். பொது பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களையே மக்களும் ஆதரிப்பார்கள்’’ என்றார்.