*மாவட்ட ஆட்சியர் தகவல்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் உரிமைகள், நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வன உரிமை சட்டம் 2006ன்படி பழங்குடியினர் பகுதிகளில் வன உரிமைகள் குழு அமைப்பது குறித்து மாவட்ட அளவிலான குழுவுக்கு பயிலரங்கு மற்றும் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வன உரிமை பாதுகாப்பு சட்டம், துறை வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், தனிநபர் உரிமைகள், கிராம சபை கூட்டுதல், நீண்ட கால மற்றும் குறுகிய கால செயல்பாடுகள், தனிநபர் உரிமைக்கான ஆதாரம், பழங்குடியின கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் உரிமைகள் மற்றும் நலனை பாதுகாக்கும் வகையில் தேவையான தொடர் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இப்பயிற்சி வகுப்பை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக பயின்று பழங்குடியினர் திட்டங்களை செயல்படுத்துவதில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, திருக்கோவிலூர் உதவி ஆட்சியர் ஆனந்தகுமார்சிங் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து வட்டாட்சியர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.