ஊட்டி : ஊட்டி பிக்கபத்தி மந்து தோடர் பழங்குடியின கிராமத்தில் ரூ.60 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார்.ஊட்டி ஊராட்சி ஒன்றியம் கூக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பிக்கபத்தி மந்து பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்கள் வாழும் பகுதியில் நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அப்பகுதியில் மேற்கொள்ளப்ப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அப்பகுதியில் வாழும் தோடர் பழங்குடியின மக்களின் கோயிலை பார்வையிட்டார்.
மேலும், அப்பகுதி மக்களின் குறைகளையும் நேரில் கலெக்டர் கேட்டார். அப்போது, அந்த கிராமத்தில் வாழும் தோடர் பழங்குடியின மக்கள் சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து,ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டித்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
மேலும், சமுதாயக்கூடம் கட்ட அப்பகுதியில் இடம் தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, கொரனூர் முதல் பிக்கபத்தி மந்து வரையில் உள்ள 2 கி.மீ., சாலையை சீரமைக்க 2024- 2025ம் நிதி ஆண்டின் கீழ் நபார்டு திட்டத்தில் ரூ.2.23 கோடி ஒதுக்ககீடு செய்யப்படும்.
இப்பகுதியில் சாலை அமைப்பதற்கான பணிகள் அடுத்த வாரம் துவக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், பழங்குடியினருக்கான பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் 5 வீடுகள் தலா ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி தரப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கோடநாடு ஊராட்சி பேடுக்கல் மந்து, கோடு தோன்மந்து ஆகிய இடங்களில் உள்ள பழங்குடியின மக்கள்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது பழங்குடியினர்கள் குடிதண்ணீர்க்கு கூடுதலாக குழாய் ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, கோத்தகிரி ஊராட்சி சார்பில் குழாய் அமைத்து தர வேண்டும் எனவும், மந்தில் வளர்க்கப்படும் எருமைகளை பாதுகாக்கும் வகையில் தடுப்பு சுவர் சீரமைத்து தர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பிஎம்., ஜென்மம் திட்டத்தின் கீழ் கோடு தேன்மந்து பகுதியில் தலா ரூ.5.73 மதிப்பில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர்களுக்கான வீடுகளை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது, ஊட்டி கோட்டாட்சியர் சதீஷ், ஊட்டி தாசில்தார் சங்கர் கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், குன்னூர் சப்-கலெக்டர் சங்கீதா, கோத்தகிரி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, விஜயா உட்பட பலர் உடனிருந்தனர்.