*பொதுமக்கள் எதிர்பார்ப்பு
போச்சம்பள்ளி : ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட 136 ஆண்டு பழமைவாய்ந்த நெடுங்கல் அணையை சுற்றுலா தலமாக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது நெடுங்கல் கிராமம்.
எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள், புல்வெளிகள் என பசுமையாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் உள்ள பெண்ணேஸ்வர மடத்தில், தென்னகத்தின் காசி என்றழைக்கப்படும் மிகப்பழமையான பெண்ணேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இதற்கு கிராமத்தில் ஆங்காங்கே காணப்படும் கல்வெட்டுகளும், சிற்பங்களுமே சாட்சியாக உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி மற்றும் பஞ்சப்பள்ளி ஆகிய பெரிய அணைகள் இருந்தாலும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே கட்டப்பட்ட பெருமை நெடுங்கல் அணைக்கு உண்டு. 1887-1888ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை, 912 அடி நீளம் கொண்டதாகும். அணையில் 8.97 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். முழுக்க முழுக்க கருங்கல் கொண்டு அணை கட்டப்பட்டுள்ளது. மேலும், இரு புறமும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த அணையின் கீழக்குப்புற கால்வாய் வழியாக பேரூஅள்ளி, காவாப்பட்டி, செல்லம்பட்டி, விளங்காமுடி, புங்கம்பட்டி, வழியாக பாரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. அணையின் மேற்குப்புற கால்வாய் வழியாக ஆவத்தவாடி, மோட்டூர், குடிமேனஅள்ளி, அகரம், தேவீரஅள்ளி, கள்ளிப்பட்டி, பண்ணந்தூர் வழியாக 7 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது.
இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் 20 அடி அகலத்தில் இருந்த கால்வாய்கள், தற்போது ஐந்து அடியாக சுருங்கி விட்டன. கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், நெடுங்கல் அணைக்கு வருகிறது. அணையை சுற்றியுள்ள இயற்கை வனப்பு மிகுந்த பகுதிகள், ஆங்கிலேயர்களை வெகுவாக கவர்ந்ததால், ஓய்வு மாளிகை கட்டி தங்கி வந்துள்ளனர்.
அணை கட்டப்பட்டு 136 ஆண்டுகளாகியும், தன் சுய அடையாளத்தை தொலைக்காமல் இன்னும் கம்பீரமாகவே காட்சியளிக்கிறது. மழை பெய்யும் சமயங்களில், அணைக்கு அதிகளவில் வரக்கூடிய தண்ணீரின் அளவு தேதி வாரியாக செதுக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளியில் இருந்து பேரூஅள்ளி செல்லும் வழியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நெடுங்கல் அணை அமைந்துள்ளது. அங்குள்ள ஆற்று பாலத்தில் இருந்து பார்த்தால் நெடுங்கல் அணையின் முழு தோற்றத்தையும் கண்டு ரசிக்கலாம்.
போச்சம்பள்ளியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள அணையை சுற்றுலா தலமாக்கினால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலத்தார்களும் வந்து ரசித்து ஓய்வெடுத்துச் செல்வார்கள். இதன்மூலம் உள்ளூர்வாசிகளுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, நெடுங்கல் அணையை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்பதே அனைத்து மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் நெடுங்கல் அணை புனரமைக்கப்பட்டது. கிருஷ்ணகிரியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இந்த அணை உள்ளது. அணை பகுதியில் அழகிய பூங்கா உள்ளது. அணையின் வலதுபுறம் 45 ஏக்கர் பரப்பளவிலும், இடதுபுறம் 15 ஏக்கர் பரப்பளவிலும் என மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், புல்வெளிப்பகுதிகளில் நீரூற்றுகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மான் பண்ணையும் அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொழுது போக்கு அம்சங்கள் குறைவு, எனவே, நெடுங்கல் அணை பூங்காவை சீரமைத்து சுற்றுலா தலமாக்கினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்,’ என்றார்.
பேரூஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் கூறுகையில், ‘போச்சம்பள்ளியில் இருந்து காவேரிப்பட்டணம் செல்லும் அனைத்து பஸ்களும், நெடுங்கல் தென்பெண்ணை ஆற்று பாலம் வழியாக செல்கிறது. தற்போது, பல்வேறு இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் நெடுங்கல் அணைக்கு வந்து செல்கின்றனர்.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு ஓய்வு மாளிகை பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அதனை சீர்செய்து சுற்றுலா தலமாக அறிவித்தால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது,’ என்றார்.
திமுக மாவட்ட பிரதிநிதி தயாநிதி கூறுகையில், ‘நெடுங்கல் அணையை சுற்றுலா தலமாக்கினால் போச்சம்பள்ளி, திருப்பத்தூர் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். போச்சம்பள்ளி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.
போதிய பொழுது போக்கு அம்சங்கள் இல்லாததால் சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள ஒகேனக்கல், 50 கி.மீ. தொலைவில் உள்ள கேஆர்பி அணைக்கு செல்ல வேண்டி உள்ளது. 15 கி.மீ. தொலைவில் உள்ள நெடுங்கல் அணையை சுற்றுலா தலமாக்கினால் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்,’ என்றனர்.