சென்னை: எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கைதுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கே.எம். ஃபைசியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அளவில் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்காகவும் பாடாற்றிவருகிற ஓர் அரசியல் இயக்கம் எஸ்டிபிஐ ஆகும். இசுலாமியர் நலன்களை முன்னிறுத்தினாலும் அனைத்து விளிம்புநிலை மக்களுக்காகவும் உரிமைக் குரல் எழுப்பிவரும் இவ்வியக்கத்தை நசுக்கிட வேண்டுமென்கிற அரசியல் உள்நோக்கத்துடன் இத்தகைய ஒடுக்குமுறைகளை மேற்கொண்டு வருகிற இந்திய ஒன்றிய அரசின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு நிறுவனங்களை தமது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவது சனநாயக விரோத நடவடிக்கையாகும். எனவே, கே.எம். ஃபைசி மீதான பொய்வழக்கைத் திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.