* 28 சிலை, 12 அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது
சென்னை: தியாகங்கள் புரிந்த தீரர்கள், அறிஞர்கள், தலைவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்கள், அரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 28 சிலைகளும் 12 அரங்கங்களும் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், குமரி முனையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் வெள்ளி விழாவை மாபெரும் கலை விழாவாகக் கொண்டாடினார். திருவள்ளுவரின் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைத்து ரூ.37 கோடி செலவில் இந்தியாவிலேயே முதலாவதாகக் கடல் மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்தார்.
எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உத்தமர் காந்தியடிகளின் சிலை, கலைஞருக்கு, சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.70 கோடியில் நிறுவியுள்ள சிலை, சென்னை, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் நிறுவியுள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை, நடமாடும் பல்கலைக் கழகம் எனப் போற்றப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில், மார்பளவு வெண்கலச் சிலை, டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகனார் பள்ளி கல்வி வளாகம் என பெயர் சூட்டி நிறுவியுள்ள பேராசிரியர் முழு உருவச் சிலை ஆகிய சிலைகள் அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தென் தமிழ்நாட்டு பாசனத்திற்கு உயிர் தந்த முல்லை பெரியாறு அணை கட்டிட தம் வாழ்வின் வளம் முழுவதையும் தியாகம் செய்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கு நன்றி செலுத்தும் வண்ணம் இங்கிலாந்து நாட்டில் பிறந்த கேம்பெர்லி நகரில் அவருக்கு ரூ.33,65,000 செலவில் மார்பளவுச் சிலை அமைத்து அதனை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை அனுப்பி திறந்து வைத்தார்.
கரிசல் இலக்கியத்தை உலகறியச் செய்த பிதாமகர் கி.ரா.என்னும் கி.ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் சிலையுடன் நினைவரங்கம், உத்தரப்பிரதேச மாநிலம், காசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு நினைவில்லமாக்கப்பட்டு பாரதியாரின் மார்பளவுச் சிலை, நாமக்கல் ஜேடர்பாளையத்தில் அல்லாள இளைய நாயகருக்கு குவிமாடத்துடன் கூடிய சிலை, பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சார்ந்த 16 தியாகிகளைச் சிறப்பிக்கும் வகையில் பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபம், வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டிய சகோதரர்கள், வ.உ.சி,. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைகள் அமைக்கப்பட்டன.
திரைப்படப் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு மதுரையில் சிலை, ப.சுப்பராயனுக்கு சென்னை காந்தி மண்டப வளாகத்தில் சிலை, சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் சிலை, சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் இந்தியக் குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த அறிவியல் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் சிலை, கடலூர் மாநகராட்சி முதுநகர் காந்தி பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை,
தூத்துக்குடி மாநகரில் 100 ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மக்களுக்குக் குடிநீர்த் திட்டம் கொண்டு வந்த நகராட்சி தலைவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலை, சமூகநீதிக் காவலர் முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னை மாநிலக் கல்லூரியில் திருவுருவச்சிலை, சென்னை காந்தி மண்டப வளாகத்தில் திராவிடப் போரொளி அயோத்திதாச பண்டிதருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம், தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டியில், “தமிழகராதியின் தந்தை” எனப் புகழ் படைத்த வீரமாமுனிவருக்கு, சிலையுடன் மணிமண்டபம், நாமக்கல் நகரில் நாமக்கல் வெ.ராமலிங்கம்பிள்ளைக்கு, அவரது நினைவில்லத்தில் சிலை அமைக்கப்பட்டது.
முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம்: 26.2.2024 அன்று பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில்”கலைஞர் உலகம்” எனும் அருங்காட்சியகத்துடன் கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம். பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபங்கள்: 27.2.2024 அன்று திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு ரூ.1.48 கோடியில் நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய திரு.சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்திற்கு ரூ.77 லட்சத்திலும், தமிழ்க் கலை உலகில் ஏழிசை மன்னர் எனப் புகழப்பட்ட எம்.கே.தியாகராஜபாகவதர் சிலையுடன் கூடிய மணிமண்டபங்கள் ஆகிய அனைத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் திவான் பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம், வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணல் தங்கோவுக்கு சிலையையும், ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் தமிழறிஞர் மு.வரதராசனாருக்கு சிலையையும், தூத்துக்குடி மாவட்டம், கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில், ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள மார்பளவுச் சிலையை மாற்றி, வீரன் சுந்தரலிங்கம் குதிரையில் அமர்ந்து போர் புரிவது போன்ற கம்பீரத் தோற்றத்துடன் கூடிய புதிய சிலை ஆகியவற்றை எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடி சிலை: சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின் நினைவைப் போற்றும் வகையில் தென்காசி மாவட்டம், விசுவநாதப்பேரியில் வெண்ணி காலாடிக்கு ரூ.50 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள சிலையையும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலி சிலை சிவகங்கை வட்டம், ராகினிப்பட்டியில் அமைந்துள்ள வேலுநாச்சியார் மணிமண்டப வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை குயிலித்தாய்க்கு ரூ.50 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள சிலையையும்,
சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் சிலை மற்றும் அரங்கம், சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் வீரத்தைப் போற்றி ரூ.2.60 கோடியில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள எத்தலப்பர் நாயக்கர் சிலையையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 9.10.2024 அன்று திறந்து வைத்தார்.
வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழா- பெரியார் நினைவகம் : கேரள மாநிலம் வைக்கம் நகரில் தீண்டாமைக்கு எதிராகத் தந்தை பெரியார் அவர்கள் தலைமை ஏற்று நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவிடம் ரூ.8.14கோடியில் புதுப்பிக்கப்பட்டு புதிய நூலகம் ஒன்றும் கட்டப்பட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் 12.12.2024 அன்று திறந்து வைத்தார்.
இதேபோல் உத்தமத் தியாகி ஐயா ஈஸ்வரன் சிலை, வாளுக்கு வேலி அம்பலம் சிலை, 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம் திறப்பு என 63 சிலைகள், 11 மணிமண்டபங்களை அமைத்ததுடன் மேலும் 28 தியாகிகளுக்குச் சிலைகளும் 12 அரங்கங்களும் அமைத்துள்ளார். ஆனால் அ.தி.மு.க. 10 ஆண்டு கால ஆட்சியில் 25 தியாகிகளுக்கான சிலைகள் மட்டுமே அமைக்கப்பட்டன. நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டிற்கு உழைத்த நல்லோரை எல்லாம் போற்றி வரும் மாட்சிகளை எடுத்துரைக்கும் சிறந்த சாட்சிகள் ஆகும் என தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.