சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டில் 2021ல் எடுக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்தாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுத்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த கோரிக்கையை அடைவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து போராடும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது ஒன்றிய அரசே தவிர, மாநில அரசு அல்ல. அந்த பொறுப்பை தட்டிக் கழிக்கிற வகையில் மாநில அரசு நடத்த வேண்டுமென்று பாமக உள்ளிட்ட கட்சிகள் கோருவது அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாத செயலாகும். பாஜவை காப்பாற்றுகிற முயற்சியாகும். எனவே, ஒன்றிய பாஜ அரசு 2021ல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மூன்றாண்டுகள் காலம் தாழ்த்தி வருகிற நிலையில் உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மோடி அரசை வலியுறுத்த விரும்புகிறேன்.