சென்னை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் இருந்த நேரத்தில் சென்னையில் நேற்று திடீரென பாஜ கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவுடனான கூட்டணியில் அதிமுக- பாஜ இடையே கடும் மோதல் போக்கு இருந்து வந்தது. எடப்பாடி, அண்ணாமலையின் உச்சக்கட்ட மோதலை அடுத்து கடந்த 25ம் தேதி நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் பாஜவுடன் அதிமுக கூட்டணி கிடையாது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அதிமுக விலகுவதாக அதிரடியாக அறிவித்தது.
இது பாஜவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கூட்டணி முறிவு குறித்து பாஜ தலைவர் அண்ணாமலை, டெல்லி மேலிடம் தான் பதில் சொல்லும் என்று மட்டும் கூறி வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலை அவசர அவசரமாக கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். புறப்படும் முன்பாக அரசியலில் இருந்து என்னை விடுவித்தால் தோட்டத்துக்கு சென்று விடுவேன். தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. உரித்தால் ஒன்றும் இருக்காது என்று தனது விரக்தியை வெளிப்படையாக தெரிவித்தார். கூட்டணி முறிவை தொடர்ந்து அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்ற போகிறார்களா என்ற பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி சென்ற அண்ணாமலை பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க முயன்றார். 2 நாட்களாக முயன்றும் அண்ணாமலையை அவர்கள் சந்திக்க மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து அண்ணாமலை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அப்போது உங்கள் வாய்பேச்சால் தமிழகத்தில் ஒரு நல்ல கூட்டணியை கெடுத்து விட்டீர்கள். வர உள்ள தேர்தலில் பாஜவுக்கு தோல்வி ஏற்பட்டால் நீங்கள் தான் முழு பொறுப்பு. அதிமுகவுடனான கூட்டணி முறிவால் உங்கள் மீது மோடி, அமித்ஷா ஆகியோர் கடும் கோபத்தில் உள்ளனர் என்று தெரிவித்தனர்.
இதனால் அண்ணாமலை கூட்டணி முறிவுக்கு பொறுப்பேற்று நான் வேண்டும் என்றால் ராஜினாமா செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர். தொடர்ந்து நீங்கள் கட்சி பொறுப்பில் இருங்கள். அதே நேரத்தில் கூட்டணி குறித்தும், அதிமுக குறித்தும் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுத்து கொள்ளலாம் என்று கூறி விட்டனர். டெல்லி சென்ற விஷயம் தோல்வியில் முடிந்ததால் அண்ணாமலை சென்னை திரும்பாமல் டெல்லியிலேயே இருந்தார். அதனால், நேற்று நடைபெற இருந்த பாஜ மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பாஜவுடன் கூட்டணி முறிவு குறித்து ஒரு வாரம் காலம் அமைதி காத்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் திறந்து பேசினார்.
அப்போது அவர்‘‘பாஜவுடன் கூட்டணி முறிவு நான் எடுத்த முடிவு இல்லை. தொண்டர்கள் எடுத்த முடிவு” என்றார். இதனால் அதிமுக கூட்டணியில் பாஜவை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சிறிய கட்சிகளை இணைத்து பாஜ தலைமையில் தமிழகத்தில் தனி அணி உருவாகும் என்று தெரிகிறது. இதற்கிடையில் சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலகமாக கமலாலயத்தில் அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் நேற்று பாஜ கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, துணை தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், கருப்பு முருகானந்தம், வினோஜ் பி.செல்வம் மற்றும் அனைத்து கோட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக விலகி உள்ளது. எனவே, மாவட்ட ரீதியாக பாஜவை எப்படி பலப்படுத்துவது? பூத்து கமிட்டி அமைப்பது எந்த அளவில் உள்ளது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராவது, என்னென்ன வியூகங்களை வகுப்பது, தொகுதியில் உள்ள நிலவரம் குறித்தும் பெருங்கோட்ட பொறுப்பாளர்களுடன் கேசவ விநாயகம் கருத்துகளை கேட்டார். வழக்கமாக, கோட்ட பொறுப்பாளர் கூட்டம் என்பது மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தான் நடைபெறுவது வழக்கம்.
அவர் சென்னையில் இல்லாத நேரத்தில் பாஜ தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது பாஜ தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரத்து செய்த மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நாளை சென்னையில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அதிமுக கூட்டணி முறிவு மற்றும் புது கூட்டணி குறித்தும், நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.