‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி 2018லிருந்து தொடர்ந்து பேசி வருகிறார். பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளே கிளம்பியுள்ளன.
ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும்போது செலவினங்கள் குறையும். ஒன்றிய அரசின் திட்டங்கள் தங்குதடையின்றி மாநிலங்களை சென்றடையும். தேர்தல் பாதுகாப்பு அம்சங்களுக்கும் பிரச்னை ஏற்படாது என கூறுகிறது பாஜ அரசு. ஆனால், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதற்கு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல அரசியல் சட்டங்களை திருத்த வேண்டும்.
அதாவது, நாடாளுமன்றம், சட்டமன்றத்தை கலைத்தல், மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துதல் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதற்கு மாநில கட்சிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
கடந்த 2019ல் ஆட்சிக்கு வந்த பாஜ அரசின் ஆட்சிக்காலம் அடுத்தாண்டு முடிவடைய உள்ளது. இதனையொட்டி, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. நடப்பாண்டின் இறுதியில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன.
கடந்தாண்டு உத்தரப்பிரதேசம், குஜராத், பஞ்சாப் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. மேலும், ஒடிசா, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும், தொடர்ந்து அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. கடந்த மே மாதம்தான் கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. மேலும், பல மாநிலங்களில் ஆட்சிகள் முடிய 2, 3 ஆண்டுகள் மீதமுள்ளன. தேர்தல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமானவை. ஒரு வாக்காளருக்கு தேசிய பார்வை ஒன்று இருக்கும். மாநில பார்வை ஒன்று இருக்கும்.
இதில், ஒன்றை தவறாக செய்தாலும் வாக்காளர்களுக்கு தேவையற்ற குழப்பங்களே ஏற்படும். தேர்தல் பிரசார வியூகம் அமைப்பதில் கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படும். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும். அதிபர் முறையை கொண்டு வருவதற்கான முயற்சியே ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் கோஷமென கூறி, திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், இதற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் போது, சுமார் ரூ.10 லட்சம் கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் பதற்றமான தொகுதிகள், வாக்குச்சாவடிகள் உள்ளன.
இதனை மனதில் கொண்டு கூடுதல் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாநில போலீசார், மத்திய பாதுகாப்பு படையினரை கொண்டு, ஒட்டுமொத்த தேர்தல்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது, இந்தியா போன்ற நாடுகளில் அவ்வளவு எளிதான விஷயமல்ல. இதனால் தேர்தல் நியாயமான, பாதுகாப்பான முறையில், நம்பகத்தன்மையோடு நடக்கும் என உறுதியாக கூறி விட முடியாது. மாநிலங்களை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் முயற்சிதான், ஒரே நாடு ஒரே தேர்தல் என்கின்றனர் எதிர்கட்சியினர். வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை, ஒன்றிய அரசு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தொடரில், இந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டால், அதனை வலுவாக எதிர்க்கவும் எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.