புதுடெல்லி: நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாரபட்சமாக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளின் தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை உயர் அரசியல் சாசன அமர்வு அமைத்து விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கடன் வாங்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு உச்ச வரம்பு விதித்ததற்கு எதிராக கேரளா மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு சூட் மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை முன்னதாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை விரிவாக விசாரிக்கும் விதமாக இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரளா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கு முன்னதாக விசாரிக்கப்பட்டு சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசும், கேரளா அரசும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூகமான முடிவுக்கு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அத்தகைய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையில் எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. தீர்வும் எட்டப்படவில்லை. எனவே நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசுக்கு எதிராக கேரளா மாநில அரசு தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவு பிறபிக்க வேண்டும். ஏனெனில் இது மாநில வளர்ச்சி திட்டங்கள் சார்ந்த ஒன்றாக இருக்கிறது. எனவே எங்களது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொண்டு அவசரமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் கேரளா அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சமாக செயல்படுவதாக கேரளா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் இதே கோரிக்கையை கொண்டு பல்வேறு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. எனவே இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் விதமாக, விரைவில் உயர் அரசியல் சாசன அமர்வு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்படும். அந்த அமர்வு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பான அனைத்து சாராம்சங்களையும் விரிவாக விசாரணை நடத்தும்” என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
தொடர்ந்து இந்த விவகாரத்துக்கு என்று ஒரு புதிய சிறப்பு அமர்வை உச்ச நீதிமன்றம் விரைவில் உருவாக்கும் என்று தெரியவருகிறது. இதில் பெருமழை காரணமாக ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யவும், நிவாரணம் வழங்கவும் சுமார் ரூ.37,907 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அதில் முதற்கட்டமாக ரூ.2000 கோடியை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.